Ganesh chaturthi: பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய நடைபெற்ற தேன் அபிஷேகம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Ganesh chaturthi: பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய நடைபெற்ற தேன் அபிஷேகம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
Honey Abhishekam: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு நூறு கிலோ தேன் கொண்டு, விடிய விடிய தேன் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சாட்சிநாதசுவாமி சமேத கரும்படு சொல்லியம்மை திருக்கோயில் உள்ளது. விநாயகர் பிரளய காலத்தில், திருப்புறம்பயம் திருத்தலத்தை தனது கருணையால் அழியா வண்ணம் காத்ததால், இங்கு ‘ஸ்ரீ பிரளயம் காத்த விநாயகர்’ என அழைக்கப்படுகிறார். இந்த கோயில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.
இங்கு உள்ள பிரளயம் காத்த விநாயகர் வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என கருதப்படுகிறது. மேலும், நத்தான்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகியவற்றால் ஆன தெய்வத்திருமேனி கொண்டவர் என்றும் பக்தர்களால் கூறப்படுகிறது. இந்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி நாளில் மாலை முதல் விடியற்காலை வரை விடிய விடிய தேன் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.
தேன் அபிஷேகம் செய்யப்படும் போது விநாயகர் செம்பவள நிறத்தில் காட்சியளிப்பது அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். விடிய விடிய செய்யப்படும் அபிஷேக தேன் முழுவதையும், விநாயகரின் திருமேனி தனக்குள்ளேயே உறிஞ்சி கொள்வது வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும்.
விநாயகர் சதுர்த்தி தவிர ஆண்டில் எந்த நாட்களிலும் இந்த விநாயகர் பெருமானுக்கு வேறு எவ்விதமான பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறுவது இல்லை. இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று (செப். 18) மாலை தொடங்கிய தேன் அபிஷேகம், இன்று (செப். 19) விடியற்காலை நான்கு மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
இதற்காக சுமார் நூறு கிலோ தேன் பயன்படுத்தப்பட்டது. இந்த தேன் அபிஷேக முடிவில், விடியற்காலையில் அலங்கரிக்கப்பட்ட விநாயகப் பெருமான் பிரகார உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில், தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது அருகே உள்ள பிற மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் வந்து தங்களது பிராத்தனைகளை விரைவில் நிறைவேற்றித்தர வேண்டி, தேன் அபிஷேக விநாயகரை தரிசனம் செய்தனர்.
இவ்விழாவினை முன்னிட்டு, சென்னை இளம் இசைச் சுடர் எச்.சூர்யநாராயணனின் இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டிய நிகழ்வு, மற்றும் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.
