எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்.. கும்பகோணத்தில் நடந்தது என்ன?

author img

By

Published : Dec 1, 2022, 4:05 PM IST

விவசாயிகள் எலிக்கறி தின்று போராட்டம்: கும்பகோணத்தில் நடப்பது என்ன?

கும்பகோணத்தில் மூடப்பட்ட சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டு இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம் சுவாமிமலையை அடுத்துள்ள திருமண்டங்குடியில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை, மற்றொரு தனியார் நிறுவனம் ரூ.145 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இதில் அரவை கரும்பிற்கு, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் நூறு கோடி ரூபாய் மற்றும் விவசாயிகளின் பெயரில் பல்வேறு வங்கிகளில் முந்தைய சர்க்கரை ஆலை நிர்வாகம் பெற்ற கடன் சுமார் 300 கோடி ரூபாய் ஆகியவற்றை உடனடியாக வழங்கக் கோரி, நேற்று (நவ.30) முதல் ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தை நூற்றுக்கணக்கான விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு திருப்பி தர வேண்டும்; திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, மூடப்பட்ட சர்க்கரை ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தும், கரும்பு விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவருமே அங்கேயே சமையல் செய்து உண்டு உறங்கி, டெல்லி பாணியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெறும் இப்போராட்டத்தில், விவசாயிகள் எலிக்கறி தின்றும், அரை நிர்வாணமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

மூடப்பட்ட சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் எலிக்கறி தின்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கரும்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தேசிய தென்னந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு போராட்டத்தில் பங்கேற்று வருகிறார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அய்யாக்கண்ணு, “ஆலை நிர்வாகம் மற்றும் அரசு, விவசாயிகளை அடிமைபோல நடத்துகிறது.

விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை மற்றும் கடன் தொகைகளை முழுமையாக வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும். தூக்கு கயிறு போராட்டம் உள்பட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை முன்னெடுப்போம்” என தெரிவித்தார்.

முன்னதாக கரும்பு விவசாயிகளுக்கு, முந்தைய சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத்தொகைகளை வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டம், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விரக்தியில் பயிரை தீயிட்டு கொளுத்திய விவசாயி - அரசு அலுவலர் விளக்கம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.