தஞ்சை கிளாமங்கலம் பகுதியில் இரட்டைக்குவளை முறையா?: புகாரும்... மறுப்பும்

author img

By

Published : Dec 2, 2022, 3:23 PM IST

Etv Bharat

தஞ்சை மாவட்டம், கிளாமங்கலம் பகுதியில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுவதாகவும், பொருட்கள் வாங்க போனால் இல்லை என கடைக்காரர்கள் கூறுவதாகவும் பட்டியல் இன மக்கள் தெரிவித்த புகாருக்கு, அங்குள்ள மாற்று சமூகத்தினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்: ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் கிராமத்தில், பட்டியல் இன மக்களிடம் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்த ஒரு வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கிராமத்தில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், முடிதிருத்தும் கடையில் ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் இருப்பதாக அப்பகுதியிலுள்ள ஒரு தரப்பு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'ஒரத்தநாடு தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, கிராம அலுவலர் ஆய்வு செய்துள்ளார். இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மாற்று சமூகத்தினர், பட்டியல் இன மக்கள் யாருக்கும் மளிகை கடைகளில் பொருள் வழங்கக்கூடாது, முடிதிருத்தம் செய்யக்கூடாது என கிராம கட்டுப்பாடு விதித்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில், ஆதிதிராவிடர் சமுகத்தைச் சேர்ந்த ஒருவர் பெட்ரோல் கேட்கும்போது, உங்களுக்கு தரக்கூடாது என கிராமத்தில் தடை விதித்து இருப்பதாக மளிகை கடைக்காரர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது’ என்றனர்.

இதுதொடர்பாக ஒரத்தநாடு தாசில்தார் சுரேஷ், கிளாமங்கலம் கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதேநேரத்தில் மாற்று சமூகத்தினருள் ஒருவர் கூறுகையில், 'ஊரில் எந்தப் பிரச்னையும் இல்லை, சட்டங்களை சாதகமாகப் பயன்படுத்தி எங்கள் மீது புகார் அளித்துள்ளனர். கடைகளில் பெட்ரோல் விற்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதால், பெட்ரோல் இல்லை என்று கூறியுள்ளதாக’ தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பாப்பாநாடு காவல்துறையினர் கிளாமங்கலம் பகுதியில் விசாரணை செய்து வீரமுத்து என்பவரை கைது செய்துள்ளனர்.

கிராமங்களில் பெட்ரோல் விற்பனை? தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டப் பொருட்கள் விற்கப்படுகின்றனவா? அப்படி விற்பனை செய்யும் பட்சத்தில் அங்கு 'கிராமத்திற்குள் கொடுக்கக் கூடாது' என்கின்றனர். இதனையடுத்து, கிராமத்தில் இவை தவிர சலூன் கடைகளில் முடித்திருத்தம் செய்வதில் பாரபட்சம் காட்டுவது, பொதுவெளியில் நடக்கத் தடை விதிப்பது, தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறையை கடைப்பிடிப்பது என்பன உள்ளிட்ட பலவகைகளில் தீண்டாமை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனிடையே, இதற்கு மற்றொரு தரப்பினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், தீண்டாமை செய்வதாக பொய்யாக அவதூறு பரப்ப இங்குள்ள மக்கள் முயல்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம், தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை சில தரப்பினர் தவறாக பயன்படுத்த எண்ணுவதாகவும் கூறப்படுகிறது.

பொருள்கள் தர மறுத்த கடை உரிமையாளர்

இந்நிலையில், கிளாமங்கலம் கிராமத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை உள்ளிட்டோர் தகுந்த ஆய்வு செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளில் சாதியப் பாகுபாடு... அரசு நடவடிக்கை தேவை - பியூசிஎல் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.