"குடியரசுத்தலைவர் கையால் விருது வாங்குவதே என் லட்சியம்' - 23 வயது இளம் ஊராட்சி மன்றத்தலைவர் சபதம்!

author img

By

Published : Oct 13, 2021, 6:37 PM IST

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தது

குடியரசுத்தலைவர் கையில் சொந்த கிராமத்திற்கு விருது வாங்கி கொடுப்பதே எனது லட்சியம் என இளம் ஊராட்சிமன்றத் தலைவராக பொறுப்பேற்க உள்ள பொறியியல் பட்டதாரி பெண் தெரிவித்துள்ளார்.

தென்காசி: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

இந்த முறை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தது. இதற்கு சாட்சியாக நேற்று(அக்.12) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பல இளைஞர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில் பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர், வெற்றி பெற்று இளம் ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

அதாவது வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட லட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ரவி சுப்பிரமணியன் - சாந்தி தம்பதியின் மகள் ஸாருகலா (23).

விவசாயத்தொழில் செய்து வருபவர், ரவிசுப்ரமணியன். கடந்த 2011ஆம் ஆண்டு வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த முறை வெங்கடாம்பட்டி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இவர் தனது மகளை தேர்தல் களத்தில் போட்டியிட வைத்தார்.

தந்தையின் முந்தைய தேர்தல் அனுபவத்தை மட்டுமே நம்பி, களமிறங்கிய ஸாருகலா பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தல் நேரத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலை பெற்றுவந்த சூழலில், இறுதியாக இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்துவடிவை விட 796 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அவர் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு இளம் தலைவராக உள்ளார்.

குடியரசு தலைவரிடம் விருது வாங்குவதே லட்சியம்

இது குறித்து ஸாரு கலா கூறுகையில், "எங்கள் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிட்டேன்;

நான் பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டத்தின்கீழ், குடிநீர் கொண்டு வந்து நீர் பிரச்னையைத் தீர்ப்பேன்.

எங்கள் கிராமத்தைச் சிறந்த பகுதியாக மாற்றி குடியரசுத்தலைவர் கையில், விருது வாங்க வேண்டும் என்பதே எனது நோக்கம்; வாக்கு கேட்டு சென்ற இடங்களில் அனைவரும் என்னை ஒரு மகளாகப் பார்த்தனர்.

எங்கள் ஊரில் நீர் பஞ்சம் வந்தபோது, எனது தந்தை மக்களுக்கு இலவசமாக நீர் கொடுத்தார். அதனால் இந்த வெற்றி எனக்கு சாத்தியமானது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

"குடியரசுத் தலைவர் கையினால் சொந்த கிராமத்திற்கு விருது வாங்கி கொடுப்பதே எனது லட்சியம்" என்று கூறும் இளம் ஊராட்சி மன்றத்தலைவர்

இளம்பெண் என்ற முறையிலும்; படித்த பட்டதாரி என்ற முறையிலும் ஸாருகலாவை கிராம மக்கள், தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நேற்று வரை மாணவியாக இருந்த ஸாருகலா இனி, ஊராட்சி மன்றத் தலைவராக தடம் பதிக்க உள்ளார். வாழ்த்துகள் ஸாருகலா!

இதையும் படிங்க: பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா: கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.