'எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கே பாரு' - திருடிய மாடுகளை உரிமையாளரிடமே ஆன்லைனில் விற்க முயற்சி

author img

By

Published : Oct 18, 2021, 7:31 PM IST

மாட்டின் உரிமையாளரிடமே விற்க முயற்சி

திருடிய மாடுகளை ஆன்லைன் மூலம் உரிமையாளரிடமே விற்க முயன்ற கும்பலிடமிருந்து கன்றுக்குட்டிகள் உட்பட மூன்று மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சிவகங்கை: செட்டிநாட்டு காவல்நிலையம் அருகே குடியிருப்பவர், ரமேஷ் (50). இவர் சிவன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார்.

வீட்டில் கன்றுக்குட்டிகள் இரண்டும், சினைப்பசு ஒன்றையும் வளர்த்து வந்தார். அவற்றின் மதிப்பு ரூ.1.5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்.12ஆம் தேதி வீட்டில் இருந்த மாடுகள் திருடுபோகின.

ஆன்லைனில் புகைப்படம்

முன்னதாக, காவல் துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், மாட்டின் உரிமையாளர் மாடுகளை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்பு ஆன்லைனில் கன்றுக்குட்டியுடன் ஒரு பசு விற்பனைக்கு வந்துள்ளது.

அதில் இருந்த மாடு ரமேஷிடம் இருந்து திருடப்பட்டது. அதைப் பார்த்த ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சினையாக இருந்த அந்த பசு, சில தினங்களுக்கு முன்புதான் கன்றுகள் ஈன்றுள்ளது. இதனால் கன்றுகளுடன் அந்த பசு விற்பனைக்கு வந்திருப்பதாகக் கூறப்பட்டது.

திருடப்பட்ட பசுவின் புகைப்படம்
திருடப்பட்ட பசுவின் புகைப்படம்

மாடுகள் மீட்பு

இதுகுறித்து ரமேஷ் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

காவல் துறையினர் கூறியபடி ரமேஷ், அந்த மாட்டை வாங்கிக் கொள்வதாக ஆன்லைனில் அறிவிப்பு செய்தவர்களின் மொபைல் எண்ணில் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த கும்பல் திருப்பத்தூர் அடுத்த கம்பனூர் அருகே கொங்கறுத்தியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு வரச் சொல்லி உள்ளனர்.

ரமேஷ் மற்றும் காவல் துறையினர் சென்றபோது, ரமேஷிடம் திருடப்பட்ட பசுவும், அதன் கன்றுக்குட்டிகளும் இருந்தன. ஆனால், அந்த கும்பல் அங்கு இல்லை. அங்கிருந்த தோட்டக்காரர்களிடம் விசாரித்தபோது, மூன்று பேர் இங்கு வந்து கன்றுக்குட்டிகளுடன் பசுக்களை விட்டுச் சென்றதாகத் தெரிவித்தனர்.

பின் அங்கிருந்த 3 மாடுகள் மீட்கப்பட்டன.

தேடும்பணியில் காவல்துறை

அங்கிருந்த கன்றுக்குட்டிகளையும் சேர்த்து 3 மாடுகளையும் மீட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, திருட்டில் காரைக்குடி, கழனிவாசல், மற்றும் குன்றக்குடி பகுதிகளைச் சேர்ந்த இருவர் திருடியதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐபிஎஸ் அலுவலர்கள் 5 பேர் டிஜிபி ஆக பதவி உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.