1000 ஆண்டுகள் பழமையான கமலாம்பிகை உடனுறை ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் நடந்த மகா கும்பாபிஷேகம்!

1000 ஆண்டுகள் பழமையான கமலாம்பிகை உடனுறை ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் நடந்த மகா கும்பாபிஷேகம்!
சிவகங்கை சமஸ்தானத்தின் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வெகு விமரிசையாக மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டி கிராமத்தில் சிவகங்கை சமஸ்தானத்தின் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் பக்தர்கள் புடைசூழ மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
மிகப் பழமையான ஸ்ரீ கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் புனரமைக்கப்பட்டு, புதிதாக ராஜகோபுரம், மூலவர் விமானம் மற்றும் விநாயகர், முருகன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், அனுமன் உள்ளிட்ட சந்நிதிகளுக்கு புதிய விமானங்கள் கட்டி முடித்து திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி, இன்று (மே 13) கோயில் அருகே பிரமாண்ட யாகசாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களைப் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் தொடங்கின.
இதனைத்தொடர்ந்து, பல்வேறு கால யாக பூஜைகள் நடைபெற்று நிறைவாக யாக குண்டத்தில் 108 மூலிகைப் பொருட்கள், பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து மஹா பூர்ணாகுதி அளிக்கப்பட்டன. இதனையடுத்து மங்கள வாத்தியங்களுடன் தீர்த்தகுடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோயிலைச் சுற்றி வலம் வந்து ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானம் கலசங்களுக்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கலசத்தில் உள்ள புனித நீரால் மகாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விமானக் கலசத்திற்கு பட்டு வஸ்திரம், பூ மாலைகள் சாற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்னர், மூலவர் ஸ்ரீ கைலாசநாதருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று, மகா பஞ்சமுக கற்பூர ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வந்திருந்த அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக தமிழருக்கு புனிதர் பட்டம்.. கன்னியாகுமரி தேவசகாயம் பிள்ளைக்கு வாடிகனில் விழா.. அமைச்சர்கள் இத்தாலி பயணம்
