சேலம் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்.. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்..!

சேலம் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்.. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்..!
Sundararaja Perumal Thirukalyanam: சேலத்தில் அருள்மிகு அழகிரிநாதர் சுவாமி திருக்கோயில் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாண மகோத்ஸவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
சேலம்: சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அருள்மிகு கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு வைபவங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண வைபவம் இந்த ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, முதல் நாள் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவ தினத்தன்று பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.
தொடர்ந்து மூலவரான பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் பல்வேறு வாசனை மலர்களாலும் பட்டாடை உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், உற்சவ மூர்த்தியான சுந்தரராஜ பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
மேலும், மகா ஹோமம் நடைபெற்றது. சுதர்சனம் பட்டாச்சாரி தலைமையில் வேதங்கள் முழங்க யாகங்கள் நடைபெற்றன. சங்கல்பம், கங்கணம் கட்டுதல் என திருமண வைபவங்கள் நடைபெற்றன. மணமேடைக்கு அழைத்து வரும்போது ஸ்ரீசுந்தரராஜ பெருமாளுக்கு பல்வேறு மலர்கள் தூவி மணமேடையில் அமர்த்தப்பட்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து சீர் வரிசை நிகழ்ச்சி நடைபெற்றன.
சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கல்யாண வைபவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் முன்னிலையில் பக்தர்களுக்கு மாங்கல்யம் காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என கோஷங்கள் முழங்க ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளுக்கும் லக்ஷ்மி பத்மாவதி தாயாருக்கும் வேத மத்திரம் முழங்க மாங்கல்ய தாரணம் என்னும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து நாகவல்லி நிகழ்ச்சி மற்றும் மாலைமாற்றுதல் என பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றன. பின்னர், வேதங்கள் முழங்க பெருமாளுக்கும் லக்ஷ்மி பத்மாவதி தாயாருக்கும் அஷ்ட தீபங்களும், மஹா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை காண வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. திருக்கல்யாண ஏற்பாட்டினை பி.எஸ்.கே கன்ஸ்ட்ரக்ஷன் கல்ரா டிசைன் நிறுவனம் சார்பில் அசோக் குமார் மற்றும் அருண்குமார் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
தொடர்ந்து அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்சுடர்மணி, கும்பகோணம் சங்கர் ராமன் தலைமையில் அருண்குமார் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
