சேலம் மாவட்டத்தில் வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் தொடக்கம்
Published: May 23, 2023, 4:10 PM


சேலம் மாவட்டத்தில் வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் தொடக்கம்
Published: May 23, 2023, 4:10 PM
காற்று மாசுபாட்டை குறைக்கும் விதமாக, சேலம் மாவட்டத்தில் வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம்: காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், சேலம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயுவை நேரடியாக குழாய் மூலம் விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 3.35 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் முழுவதும் ரூ.1300 கோடி மதிப்பில் 3.35 லட்சம் வீடுகளுக்கும், 158 பெட்ரோல் பங்குகளுக்கும் இயற்கை எரிவாயு வழங்கிடும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சேலம் இரும்பாலையில் இயற்கை எரிவாயு மையம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சேலம் மாநகரப் பகுதி முழுவதும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிராவலராக மாறிய ராகுல்... லாரியில் பயணம்.. ஓட்டுநர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார்!
இந்த இயற்கை எரிவாயு மையத்தினை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப்லைன்ஸ் பிரிவு இயக்குநர் டி.எஸ்.நானாவேர் தொடங்கி வைத்தார். 450 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 50 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் குழாய் மூலமாகத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜாகீர் அம்மாபாளையம், திருவாக்கவுண்டனூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
இதேபோன்று இரும்பாலை ஆவின், பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு நிரப்பும் பணியும் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நகர இயற்கை எரிவாயு செயல் இயக்குநர் எஸ்.கே.ஷா, தென் மண்டல குழாய் பாதை பிரிவு செயல் இயக்குநர் சைலேஷ் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காகத் தான் சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறேன்' - முதலமைச்சர்
