10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் மூவர் கைது!

10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் மூவர் கைது!
Three person harassing a school girl: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த 3 பேரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையைச் சேர்ந்த 24, 31 மற்றும் 43 வயதான நபர்கள் நண்பர்களாக இருந்து உள்ளனர். இவர்களில் 24 வயதான இளைஞர் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி மாலை அங்கு உள்ள கடைக்கு பேனா வாங்குவதற்காக மாணவி சென்றுள்ளார்.
அப்போது மாணவியிடம், அருகில் காதணி விழா ஒன்று நடப்பதாகவும், அங்கு சென்று வரலாம் என்று சொல்லி வலுக்கட்டாயமாக அந்த இளைஞர் மாணவியை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அந்த காரில் அவரது நண்பர்கள் இருவருமே இருந்து உள்ளனர்.
இதனையடுத்து காரில் செல்லும்போது இளைஞர், மாணவியின் தோள் மீது கை போட்டு உள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தபோது கன்னத்தில் அறைந்ததாகவும், மேலும் அவர்கள் மாணவியின் மடியில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. மறுநாள் மாணவியை ஒரு பகுதியில் இறக்கிவிட்டு அனைவரும் காரில் சென்று விட்டனர்.
இந்நிலையில் மாணவியின் தாயார் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். மாணவியின் தாயார் அளித்த புகாரில், தன்னுடைய மகளை 3 பேர் காரில் கடத்திச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர் என குறிப்பிட்டார். அதனையடுத்து வழக்கு அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது.
பின்னர், மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
