குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும் - முத்தரசன்

author img

By

Published : Nov 24, 2021, 9:02 PM IST

சிபிஐ முத்தரசன்

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும், கொலை குற்றங்களையும் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணை, பாலாறு மற்றும் பொன்னையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று (நவம்பர் 24) நேரில் பார்வையிட்டார். அப்போது வாலாஜா அணைக்கட்டு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகரித்து வரும் வன்முறை கொலைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். காவல் உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், ஆர்.டி.ஓ. அலுவலரை வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

முத்தரசன் பேட்டி

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையில் கிடைக்கக்கூடிய நீரை முறையாக பயன்படுத்தினால் குடிநீர், பாசனத்திற்கு தேவையான தண்ணீர் பெற முடியும். ஆந்திராவில் 33 கிமீ தூரத்திற்கு 22 தடுப்பணைகள் உள்ளது. 200 கிமீ பயணிக்கும் பாலாற்றில் போதுமான தடுப்பணைகள் கட்டாததால் 1 லட்சம் கன அடி தண்ணீர் வீணாகியுள்ளது. அதிகளவில் அணைகள் கட்டி தண்ணீர் வீணாகாமல் தேக்கி வைக்க வேண்டும்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவிக்கப்பட்டது போல் இழப்பீடு வழங்க வேண்டும். மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.