முதுகுளத்தூர் மணிகண்டன் காவல் துறை துன்புறுத்தலால் மரணம்? - விசாரிக்கக் கோரும் அண்ணாமலை

author img

By

Published : Dec 7, 2021, 8:32 AM IST

பாஜக தலைவர் அண்ணாமலை

ராமநாதபுரத்தில் மணிகண்டன் இறந்த விவகாரத்தில், காவல் துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணகுமார் மகன் மணிகண்டன் (21). நண்பர்கள் இருவருடன், இவர் பரமக்குடியிலிருந்து கீழத்தூவலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கீழத்தூவல் காவல் நிலையம் அருகே, வாகன சோதனையில் நிற்காமல் சென்றதால், காவல் துறையினர் விரட்டியதில் இருவர் இறங்கி தப்பினர்.

மணிகண்டனை மட்டும் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் இரவு வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், வீட்டில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மணிகண்டன் உயிரிழந்தார்.

காவல் துறையினர் தாக்கியதில்தான் மணிகண்டன் உயிரிழந்ததாக அவருடைய உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உடற்கூராய்வு முடிவுகள் வந்தபின், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சார்ந்த சகோதரர் மணிகண்டன் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. வாகனப் பரிசோதனையின்போது அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் காவல் துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறு எந்த மட்டத்தில் நடந்திருந்தாலும்கூட, உரிய தண்டனை அளிக்க வேண்டும். சகோதரரை இழந்துவாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.