இந்தியா சென்று பிழைத்துக் கொள்ளலாம் என பிளாஸ்டிக் படகில் இலங்கை அகதிகள்!

author img

By

Published : Jun 2, 2022, 6:09 AM IST

இந்தியா சென்று பிழைத்து கொள்ளலாம் என பிளாஸ்டிக் படகில் தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள்!

இந்தியாவிற்குச் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என பணம் கொடுத்து இலங்கை அகதிகள் பிளாஸ்டிக் படகில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோவில் பகுதியில் நேற்று (ஜூன்1) மூன்று அகதிகள் இருப்பதாக மண்டபம் கடலோர காவல் படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், அவர்களை மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் அடிப்படையில், வந்தவர்கள் கொழும்பு தெமட்டோ கோட்டை பகுதியைச் சேர்ந்த வரதன் மனைவி ஜெசிந்தா மேரி (51), வரதன் மகன் பிரிவின் சஞ்சய் (10), லோகநாதன் மகன் அனிஸ்டன் (31) என தெரியவந்தது. இதுகுறித்து கடல் கடந்து வந்த மேரி கூறுகையில், “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து எங்களால் கூலி வேலை செல்ல முடியவில்லை.

இதனால், உணவிற்காக தவித்து வந்தோம். எனவே, இந்தியா சென்று பிழைத்து கொள்ளலாம் என முடிவு செய்தோம். தொடர்ந்து, நேற்று மாலை மன்னார் பகுதியில் இருந்து பணம் கொடுத்து பிளாஸ்டிக் படகில் வந்துள்ளோம்” எனத் தெரிவித்தார். மேலும் 3 அகதிகளும் 1995 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை குடியாத்தம் அகதிகள் முகாமில் இருந்துள்ளனர் என்றும் விசாரனையில் தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மூன்று பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக 75 பேர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எரிபொருள் தட்டுப்பாடு: சென்னையிலிருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லும் இலங்கை விமானங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.