2023 மார்ச் முதல் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் போக்குவரத்து: தெற்கு ரயில்வே

author img

By

Published : Dec 3, 2022, 10:53 PM IST

பாம்பன் பாலம்

ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம்: மண்டபம் பகுதியையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாதையாக உள்ள பாம்பன் பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஏறத்தாழ 105 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம், 1988 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தையும், மண்டபத்தையும் இணைக்கும் சாலை பாலம் அமைக்கப்படும் வரை தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்தாக இருந்தது.

ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டதால், ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்களை விரைவாக இயக்கவும், புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும் நவீன முறையில் புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது. இதையடுத்து பாம்பன் கடலில் ஏறத்தாழ 2 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 535 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில்வே பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய ரயில்வே பால கட்டுமான பணிகளை இந்திய ரயில்வேயின் துணை அமைப்பான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 84 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், புதிய பாலத்திற்காக கடலில் பல்வேறு சீதோசன சிரமங்களுக்கு இடையே 101 தூண்களை நிறுவியதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தூண்களில் 99 இணைப்பு கிர்டர் வசதி அமைக்க வேண்டிய நிலையில் இதுவரை 76 இணைப்பு கிர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும் கப்பல்கள் எளிதாக பாலத்தைக் கடக்கும் வகையில் செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கிர்டர் பொருத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், மின்தூக்கி கிர்டரை பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய பாலத்தில் கப்பல் செல்வதற்காக பாலத்தின் நடுப்பகுதி இணைப்பை திறக்க இரு புறமும் மனித ஆற்றல் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய பாலத்தில் நவீன முறையை இந்திய ரயில்வே கையாண்டு உள்ளதாக கூறப்படுகிறது. 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து துவக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'குறவர்' பெயர் நீக்கக்கோரி வழக்கு: மத்திய, மாநில பதிலளிக்க ஆணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.