கபடி போட்டியில் தகராறு - இரு கிராமத்தினர் இடையே மோதல்

கபடி போட்டியில் தகராறு - இரு கிராமத்தினர் இடையே மோதல்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு கிராம மக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 400 பேர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே நடந்த கபடி போட்டியில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருகிராம மக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த தகராறு காரணமாக 400 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளங்குளத்தூரில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு (ஜூலை 4) கபடிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் கீழ கன்னிசேரி அணி தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கீழ கன்னிசேரி கிராமத்தினருக்கும், விளங்குளத்தூரைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே இருதரப்பினரையும் பக்கத்து கிராமத்தினர் சமரசம் செய்தனர்.
இருந்தபோதிலும், திங்கள்கிழமை விளங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தர்கள் சென்ற பேருந்தை வழி மறித்து கீழ கன்னிசேரி கிராமத்தினர் தாக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த விளங்குளத்தூர் கிராமத்தினர் வயல்காட்டில் விவசாய வேலைக்குச் சென்றவர்களைத் தாக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினருக்கிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், மோதல் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அத்துடன், சம்பந்தபட்ட கிராமங்களில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரியில் சாதி பாகுபாடு...?- முதல்வருக்கு கோரிக்கை விடுக்கும் ஆடியோ வைரல்
