பாம்பன் புதிய ரயில் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

author img

By

Published : Jun 3, 2022, 10:33 PM IST

பாம்பன் புதிய ரயில் பாலம்

பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டிலேயே மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் தீவை தமிழ்நாட்டுடன் இணைக்கும் வகையில் பாக்ஜலசந்தியில் பாம்பன் ரயில் பாலம் கடந்த 1914ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பாலம் 145 கிர்டர்களுடன் 2.06 கி.மீ., தூரத்திற்கு அமையப் பெற்றுள்ளது. கிர்டர்கள் ஒவ்வொன்றும் 12.2 மீட்டர் நீளம் கொண்டவையாகும். பாம்பன் பாலத்தின் மையத்தில் கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக, சிறப்பு வசதியுடன் தூக்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இது 65.23 மீட்டர் நீளம் உடையது.

மீட்டர் கேஜ் ரயில்களின் இயக்கத்திற்காக கட்டப்பட்ட பாம்பன் பாலம், கடந்த 2006-07ஆம் நிதியாண்டில் அகலப்பாதை ரயில் போக்குவரத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது. இருந்தபோதிலும் 100 ஆண்டுகள் பழமையான பாலம் புயல், மழை காரணமாக சேதம் அடைந்து வருகிறது. அதுவும் தவிர கடல் மட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கிர்டர்கள், கடல் நீரால் துருப்பிடிக்கின்றன. எனவே, பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டுவது என்று ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூபாய் 279 கோடி ஒதுக்கப்பட்டது.

தொழிற்சாலை பணிகள்
தொழிற்சாலை பணிகள்

பிரமாண்ட தொழிற்சாலை அமைப்பு: பாம்பன் புதிய பாலம் 18.3 மீட்டர் உயரத்தில் 99 கிர்டர்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் மத்தியில் இருபுறங்களையும் இணைத்து லிஃப்ட் போல மேலே செல்லும் வகையில் தூக்கு பாலம் அமைய உள்ளது.

பிற்காலத்தில் இரட்டை ரயில் பாதை அமையும் வகையில் தூண்கள் அகலமாக அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு ரயில் பாதை அமைக்கும் வகையில் கிர்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கடல் மண் பரிசோதனை முடிவுகள் காரணமாக 1.5 மீட்டர் சுற்றளவுள்ள குவியல் முறை தூண்கள் அமைக்கப்படுகின்றன.கிர்டர்கள் 18.3 மீட்டர் இரும்புத் தகடுகளால் உருவாக்கப்படுகிறது. இதனை பிரமாண்ட டவர்கள் மூலம் செங்குத்தாக உயர்த்தும் வகையில் மெகா லிஃப்ட் தயாராகி வருகிறது. இதன் நீளம் 72.5 மீட்டர்கள் ஆகும்.

பாம்பன் புதிய ரயில் பாலம்
பாம்பன் புதிய ரயில் பாலம்

பாம்பன் பாலத்திற்கான கட்டுமானங்களை வடிவமைப்பதற்காக சத்திரக்குடி ரயில் நிலையத்தில் பிரமாண்ட தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டுமானப்பொருட்கள் சர்வதேச தரத்துடன் வடிவமைக்கப்பட்டு, பாம்பன் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, புதிய கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

பாம்பன் புதிய ரயில் பாலம்
பாம்பன் புதிய ரயில் பாலம்

பாம்பன் புதிய பாலத்தை சாலை போக்குவரத்து பாலத்துக்கு இணையாக 17 மீட்டர் வரை உயர்த்த முடியும். இதன் மூலம் பெரிய கப்பல்களும் ராமேஸ்வரம் வந்து செல்ல வழிவகை ஏற்படும். பாம்பன் கடலுக்கு நடுவில் 35 மீட்டர் ஆழத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு, தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கானப் பணிகள் அடுத்த மாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலம் இந்த நிதியாண்டில் பயணிகள் போக்குவரத்திற்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திற்கு நிர்வாகக்குழு அமைத்து அரசு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.