'பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்'

author img

By

Published : Aug 26, 2021, 9:46 AM IST

Updated : Aug 26, 2021, 9:53 AM IST

vikramaraja-press-meet-in-pudukottai

பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு உடனடியாகக் குறைக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி, தஞ்சாவூர் மண்டலம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய விக்கிரமராஜா, 'வணிகர்கள் கடைகளில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. மீறினால் தமிழ்நாடு அரசு அவர்களின் கடையைச் சீல்வைக்கும் நிலை ஏற்படும்' என்றார்.

பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், "அரசு சுங்கக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏற்க முடியாதது. இது போன்ற பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு உடனடியாகக் குறைக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

சுங்கக் கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையோடு எவ்வளவு தொகை வசூல் செய்யப்படுகிறது, எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது என்பது குறித்த பலகை சுங்கச்சாவடிகளில் வைக்கப்பட வேண்டும்.

இதேபோன்று தற்போது வணிகர்கள் மீது காவல் துறை பிசிஆர் சட்டத்தை உபயோகப்படுத்திவருகிறது. இதனால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வணிக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் பலர் உணவு உண்டுவிட்டு பணம் கொடுக்காமல் ரவுடித்தனம் செய்கிறார்கள்.

பிசிஆர் சட்டம்

இதனைத் தட்டிக் கேட்கும்போது பல பகுதிகளில் பிசிஆர் வழக்குப் போடப்படுகிறது. இதனைக் காவல் துறையும் தமிழ்நாடு அரசும் தடுத்து நிறுத்த வேண்டும். வாட் வரியினால் பல வணிகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடம் கோரிக்கைவைத்த பின்னர் அந்த வழக்கை சமரச தீர்வு மூலம் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

கடந்த காலங்களில் ஜிஎஸ்டி பதிவு பெற்றுள்ளது மட்டுமே வணிகர் நல வாரியத்தில் பதிவுசெய்ய முடியும். ஆனால் தற்போதைய அரசு அதை நீக்கி அனைத்து வணிகர்களும் மனித நல வாரியத்தில் உறுப்பினர் ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு கோரிக்கைகளைக் கேட்டு பரிசீலனை செய்துவருகிறது. நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை அரசுப் பணிகளுக்கு அறிவித்துள்ளனர். இதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மானியக் கோரிக்கையின்போது நாங்கள் வைத்துள்ள ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன” என்றார்.

இதையும் படிங்க : ’சத்துணவுத் திட்டத்தை 12ஆம் வகுப்பு வரை நீட்டித்திடுக’ - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

Last Updated :Aug 26, 2021, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.