புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை திறப்பு!

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை திறப்பு!
TN third Govt Dental College and Hospital: புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான, தமிழகத்தின் 3வது அரசு பல் மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டைக்கு அறிவிக்கப்பட்டு, கடந்த 29-09-2020 அன்று அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமான பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது.
இதனை தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரண்டு முறை வந்து பார்வையிட்டுச் சென்ற நிலையில், எப்பொழுது திறப்பு விழா காணப்படும் எனப் புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
இதற்கிடையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது." என்று தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழக முதல்வரால் காணொளி காட்சி வாயிலாக நேற்று (நவ 15) திறந்துவைக்கப்பட்டது. இக்கல்லூரியில் 2023-2024 ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் 50 மாணவர்கள் சேர்க்கைக்காக அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 10.14 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை மற்றும் நிர்வாகக் கட்டடம், மாணவ மாணவியர் விடுதி, ஆசிரியர் மற்றும் முதல்வர் தங்கும் விடுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு 5 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான தேவையான அதிநவீன உபகரணங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குத் தேவையான ஆசிரியர், நிர்வாகம், மற்றும் கல்விசாரா பணிகளுக்கு 148 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மூலம், தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்குத் தரமான பல் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
