வட போச்சே!.... 'வெட்டி பந்தா' பாஜக நிர்வாகியின் அலப்பறை! காமெடி ஸ்டோரியின் பின்னணி என்ன?

author img

By

Published : May 21, 2023, 4:46 PM IST

BJP

டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விடுத்த எச்சரிக்கைக்கு, தாம் நடத்திய போராட்டமே காரணம் எனக் கூறி பாஜக நிர்வாகி ஒருவர், சொந்த செலவில் தனக்கே பாராட்டு விழா நடத்தியுள்ளார். ஆனாலும், டாஸ்மாக் கடையில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால் மக்கள் மத்தியில் 'பல்ப்' வாங்கியிருக்கிறார், அந்த பாஜக பிரமுகர். யார் அவர்? வாருங்கள் செய்திக்குள் போவோம்.

சொந்த செலவில் பாராட்டு விழா

புதுக்கோட்டை: பப்ளிசிட்டி (விளம்பரம்) - அரசியல்வாதி, இவை இரண்டையும் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது. அவ்வாறு பப்ளிசிட்டிக்காக அரசியல் பிரமுகர் ஒருவர் புதுக்கோட்டையில் செய்த சம்பவம் சொந்த காசில் சூனியம் வைத்த கதை போல் மாறிவிட்டது. புதுக்கோட்டை மாவட்ட பாஜகவில் நீண்ட கால உறுப்பினராகவும், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவராகவும் இருந்து வந்தவர், சீனிவாசன். மாவட்ட பாஜகவினர் ஒரு பாதையில் சென்றால், அதற்கு நேர் எதிராக செல்லக்கூடியவர் இவர் எனக் கூறப்படுகிறது.

ஆளுநருக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டிய சீனிவாசன், பேனா சிலைக்கு எதிராக கடல் மாதா எனக் கூறுவது போன்ற போஸ்டர்களையும் அண்மையில் ஒட்டினார். அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாகக் கூறி ஆதரவாளர்களுடன் போராட்டம், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதால் பிச்சை எடுக்கும் போராட்டம் ஆகியவற்றையும் நடத்தியுள்ளார். சில நேரங்களில் விளம்பரத்துக்காக அவர் செய்யும் செயல்கள் விமர்சனங்களையும் ஏற்படுத்தும்.

இதனால் பாஜக மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், சீனிவாசனுக்கும் இடையே இடைவெளி அதிகமானது. இதையடுத்து அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு பறிக்கப்பட்ட பிறகும், கலங்காத சீனிவாசன் வழக்கம் போல் தனது நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் ரூ.5 கூடுதலாக விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தனது ஆதரவாளர்களைத் திரட்டிய சீனிவாசன், மதுபாட்டிலுக்கு கூடுதலாகப் பணம் வசூலிப்பது பிச்சையெடுப்பதற்குச் சமம் எனக் கூறி, பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்தினார்.

இதற்கிடையே அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "டாஸ்மாக்கில் கூடுதலாகப் பணம் பெற்றுக் கொண்டு மது விற்பனை செய்யப்படுவது இல்லை. கூடுதல் பணத்துக்கு மது விற்கும் கடையைக் குறிப்பிட்டு புகார் கூறினால் விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சீனிவாசன், தான் நடத்திய போராட்டங்களால் தான் டாஸ்மாக் கடைகளில் மதுபானத்துக்கு கூடுதல் பணம் வசூலிப்பதில்லை என்றும், கூடுதல் பணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் பேட்டி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் தனது சொந்த பணத்தை ஆதரவாளர்களிடம் கொடுத்து மாலை போட்டுக் கொண்டு, பட்டாசு வெடித்து தனக்குத் தானே பாராட்டு விழாவும் நடத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அங்கு வந்த நபர், டாஸ்மாக் கடைகளில் வழக்கம் போல் கூடுதல் விலைக்கு தான் மதுபானம் விற்கின்றனர் என்றார். பின்னர் ஆதரவாளர்களுடன் டிவிஎஸ் கார்னர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார், சீனிவாசன்.

தன்னிடம் இருந்த ரூ.500-ஐ கொடுத்து, அங்கிருந்த நபரிடம் மதுபானம் வாங்கி வருமாறு கூறி சோதனை செய்தார். 2 குவார்ட்டர் பாட்டில்களுடன் வெளியே வந்த நபர், "எப்போதுமே பாட்டிலுக்கு ரூ.10 தான் அதிகமாக கேட்பார்கள்; நீங்கள் வந்ததை அறிந்து 15 ரூபாய் அதிகமாக வசூலித்துவிட்டனர்" என்றார். இதைக் கேட்டு அங்கு கூடியிருந்தவர்கள் சிரிக்க, சீனிவாசன் அசடு வழிந்தார்.

சில நிரந்தர வாடிக்கையாளர்கள், "டாஸ்மாக்கில் சரக்குகளுக்கு கூடுதல் விலை தொடர்கிறது. உங்கள் முயற்சி தோல்வி" என சீனிவாசனிடம் கூற, தனது போராட்டம் காமெடியில் முடிந்ததை எண்ணி அங்கிருந்து நைஸாக நடையைக் கட்டினார், பாஜக நிர்வாகி சீனிவாசன்.

இதையும் படிங்க: கள்ளச்சாராய இறப்புகள் : அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் அண்ணாமலை கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.