முழுக்கொள்ளளவை எட்டிய கொட்டரை நீர்த்தேக்கம் - பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

author img

By

Published : Oct 12, 2021, 5:14 PM IST

முழுக்கொள்ளளவை எட்டிய கொட்டரை நீர்த்தேக்கம்

அண்மையில் பெய்த தொடர் மழையின் காரணமாக, பெரம்பலூர் மாவட்டம், கொட்டரை நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியது. இதையொட்டி, அணையின் நீர் செல்லும் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வந்தது.

குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டாரப் பகுதியான சிறுகன்பூர், தெற்கு மாதவி, கொட்டரை, சாத்தனூர், ஆதனூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் இடைவிடாது கனமழை பெய்தது.

இதனால், மருதை ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. தெற்கு மாதவி கிராமத்தின் அருகே மருதை ஆற்றுப் பாலத்தின் இருபுறமும் வெள்ளநீர் அதிகளவில் செல்வதால், வாகனங்கள் அந்த பகுதியைக் கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வழியே வரும் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

கிராமங்களில் புகுந்த மழைநீர்; மின்சாரம் துண்டிப்பு
மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. விளை நிலங்களிலும், வீடுகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை நீர் வழிந்தோடுவதற்கு, சரியான வடிகால் வசதி செய்யப்படாததால், சிறுகன்பூர், தெற்கு மாதவி உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளிலும் தெருக்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் கிராமங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

முழுக்கொள்ளளவை எட்டிய கொட்டரை நீர்த்தேக்கம்:
இதுமட்டுமின்றி, மருதை ஆற்றில் கரைபுரண்டு வெள்ள நீர் ஓடுவதால், கொட்டரை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவைத் தொட்டுள்ளது. இதனால், நீர் திறந்து விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மருதையாற்றில் வெள்ள நீர் அதிக அளவில் செல்லும் என்பதால், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை: நண்பகல் 1 மணி முன்னிலை நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.