அரசு பள்ளியின் கேட் விழுந்து மாணவனின் காலில் எலும்பு முறிவு!
Updated on: Jan 23, 2023, 8:01 PM IST

அரசு பள்ளியின் கேட் விழுந்து மாணவனின் காலில் எலும்பு முறிவு!
Updated on: Jan 23, 2023, 8:01 PM IST
பெரம்பலூர் அருகே அரசு பள்ளியின் கேட் விழுந்து 4-ஆம் வகுப்பு மாணவனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள தம்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 20 மாணவர்களும் 20 மாணவிகளும் என 40 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியருடன் மற்றொரு உதவி ஆசிரியையும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளி துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பள்ளிக்கு ஒன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பள்ளியின் கேட் மூடப்பட்டிருந்ததால், தாமதமாக வந்த மாணவருக்கு உதவி செய்வதற்காக அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் தம்பை கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த சரண்ராஜ் மகன் முகேஷ்(9) என்ற மாணவர் கேட்டை திறந்து உள்ளார்.
அப்பொழுது கேட் தானாக கழன்று முகேஷின் மேல் விழுந்தது. இதில் முகேஷ்-க்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலியால் துடித்த மாணவரை ஆசிரியர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியின் கேட் விழுந்து மாணவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் தீ குளிப்பு சம்பவம்.. போலீசார் நூதன முறையில் சோதனை!
