ETV Bharat / state

'பாஜக இரட்டை வேடம் போடவில்லை' - அண்ணாமலை

author img

By

Published : Jul 16, 2021, 8:54 AM IST

மேகதாது அணை விவகாரத்தில் இரட்டை வேடம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

பெரம்பலூர்: தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 16) சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக கோவையில் இருந்து நேற்று (ஜூலை 15) புறப்பட்டு, முக்கிய நகரங்கள் வழியாக சாலை மார்க்கமாக சென்னை வந்தார்.

வரும் வழியில் முக்கிய நகரங்களில் கட்சியினரைச் சந்தித்து பேசிய அவர் நேற்று மதியம் பெரம்பலூர் வந்தார். அவருக்கு பாஜக மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு விவசாயிகளுக்கும், அரசிற்கும் மாநில பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும். மேலும் காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் பாரப்பட்சம் என்பதே கிடையாது.

இரட்டை வேடம் இல்லை

தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரில் ஒரு சொட்டு கூட விட்டுக் கொடுக்காமல் நமது மாநிலத்திற்கு பெற்றுத் தருவதிலும் அரசுக்கு பாஜக உறுதுணையாக இருக்கும். இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

பெரம்பலூரில் அண்ணாமலை

கொங்குநாடு - விலாசம் மட்டுமே

கொங்குநாடு பிரச்சினையை பாஜக கையில் எடுக்கவில்லை திமுக தான் அதனை கையில் எடுத்து அரசியல் செய்துள்ளது. நாங்கள் இந்த விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. மத்திய இணை அமைச்சராக உள்ள முருகனுக்கு கொங்குநாடு என்ற விலாசத்தை மட்டுமே கொடுத்தோம்.

அதனைத் தேவையில்லாமல் திமுக பெரிதுப்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு என்று 1947இல் இருந்தே திமுகவினர் அழைத்திருக்க வேண்டும். ஏன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியில் இருந்த கருணாநிதி ஒன்றிய அரசு என்று அழைக்கவில்லை.

தற்போது மட்டும் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்று திமுகவினர் பேசுகிறார்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

முதலில் திமுக பிறகு மத்திய அரசு

தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில், திமுக தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு முதலில் ஐந்து ரூபாயை மற்ற சில மாநிலங்களைப் போல குறைக்க வேண்டும். அவ்வாறு குறைத்தால் மத்திய அரசு குறைப்பதை பற்றி பிறகு பேசலாம்.

முறையற்ற இணைதள செய்தி சேனல்களை கட்டுப்படுத்துவது குறித்து சட்டம் இயற்றப்படவுள்ளது. அதற்காக ஊடகத் துறையினர் கால அவகாசம் கேட்டுள்ளனர். இது பதிவு பெற்ற, அதே நேரத்தில் நியாயமான முறையில், சமுக அக்கரையுடன் செயல்படும் ஊடகங்களுக்கு எந்த வித பாதிப்புகளையும் தராது" என்று கூறினார்.

பேட்டியின் போது பாஜகவினர், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'மீடியாவை கண்ட்ரோல் பண்ணுவோம்..' - அண்ணாமலை பகிரங்க மிரட்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.