ஆடு மேய்க்க சென்ற பெண் சடலமாக மீட்பு.. வட மாநில தொழிலாளர்கள் மீது புகார்.. நாமக்கல் போலீசார் விசாரணை!

author img

By

Published : Mar 13, 2023, 2:27 PM IST

Updated : Mar 13, 2023, 7:59 PM IST

Etv Bharat

நாமக்கல் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலத் தொழிலாளர்கள்தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்றும், அவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல்: கரப்பாளையத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவருக்கு 27 வயதான மனைவி இருந்தார். இவர் நேற்று முன்தினம் (மார்ச்.11) வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்காக வீட்டின் அருகே உள்ள ஓடை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராத நிலையில், மாலை ஆறு மணிக்கு ஆடுகள் மட்டும் வீட்டுக்கு தானாக திரும்பி வந்துள்ளன.

கணவர் விவேகானந்தன் தனது மனைவியைத் தேடிச் சென்றபோது, ஓடை அருகே முட்புதரில் முகம், கழுத்துப் பகுதியில் ரத்த காயங்களுடன் தனது மனைவி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அப்பெண் அணிந்திருந்த கவரிங் செயின் மற்றும் தங்கத்தோடு காணவில்லை என்று தெரிகிறது. அதேபோல் உடலில் பல்வேறு காயங்கள் இருந்துள்ளதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகைகளை திருடுவதற்காக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் இருந்த சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால், சடலத்தை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், பெண்ணை கொலை செய்தது வட மாநில தொழிலாளர்கள்தான் என்று கூறி நாமக்கல் - மோகனூர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தங்களது பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையின் கொட்டைகளில் வட மாநில இளைஞர்கள் பலர் தங்கி பணிபுரிவதாகவும், அவர்கள் தங்களது விவசாய காட்டிற்கு வந்து அங்குள்ள பண்ணைக்குட்டையில் மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும், பலமுறை எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வந்ததாகவும் விவேகானந்தன் கூறினார்.

மேலும், தனது மனைவியின் கழுத்தில் கயிறை மாட்டி சுமார் 400 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் மீன் பிடிக்க பயன்படும் தூண்டில் ஆகியவை இருந்தது எனவும் தெரிவித்தார். ஆனால், போலீசார் இதுவரை ஒரு வடமாநில தொழிலாளர்களை கூட அழைத்து விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார், தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பெண்ணின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று கூறிவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடல், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: விடுதி மேலாளரை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர் கைது!

Last Updated :Mar 13, 2023, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.