நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் ஐ.டி பார்க்...அமைச்சர் மனோ தங்கராஜ்

author img

By

Published : Sep 21, 2022, 11:03 AM IST

Etv Bharat

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் எ ஐ.டி பார்க் அமைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மின்- அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "மின் அலுவலகங்கள் மூலம், அரசு திட்டங்களுக்கு யார் தகுதியானவர்கள் என்ற தரவுகளை உடனுக்குடன் பெற்றிட முடியும். மேலும், இ-சேவை மையங்கள் மூலம் 200 ஆக இருந்து வந்த அரசின் சேவைகள் தற்போது 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் படிப்படியாக அரசின் அனைத்து துறை சேவைகளும் இந்த மையங்கள் மூலம் வழங்கப்படும்.

அரசு அலுவலகங்கள் முழுவதும் மின்- அலுவலகங்களாக மாற்றப்படும். நாமக்கல் போன்ற வளரும் மாவட்டங்களில், படித்த இளைஞர்களுக்கு திறன்களை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.

தமிழக அரசு அறிவித்தது போல ஸ்மார்ட் கவர்னன்ஸ் என்பதை உள்ளடக்கி இதுபோன்ற மின்- அலுவலக திட்டங்களை இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த உள்ளோம். இதன்மூலம் அரசு அலுவலகங்களில் காகிதங்கள் பயன்படுத்துவது குறைக்கப்பட்டு, அரசு பணியாளர்கள் அவர்கள் பணிகளை விரைந்து செய்ய முடியும்.

அமைச்சர் மனோ தங்கராஜ்

கொல்லிமலையில் எளிதான இணைய தளம் மற்றும் தொலைபேசி சேவைக்காக 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொலைபேசி கோபுரம் அமைக்க, ஆதிதிராவிட நலத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் முன்வழிவு அனுப்பியுள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் வெகு விரைவில் 12,525 கிராமங்கள் பைபர் நெட் மூலம் இணையதள சேவையை பெற முடியும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் விரைவில் முடிவடையும்.

தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. இத்துறை 16-வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

டிஜிட்டல் சேவைகள் வழங்குவதில் 17-வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தமிழகம் முன்னேறி நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் எல்காட் மூலம் ஐ.டி பார்க் அமைக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகுவது தான் திராவிட மாடல்...எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.