செந்தில்பாலாஜியின் குற்றச்சாட்டு உண்மையா? - நிச்சயம் விளக்குவதாக தங்கமணி உறுதி

author img

By

Published : Aug 21, 2021, 11:56 AM IST

Updated : Aug 21, 2021, 2:23 PM IST

தங்கமணி

'கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஏற்கெனவே நான் எடுத்த கணக்கைத்தான் தற்போது செந்தில்பாலாஜி தெரிவித்து முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க முயற்சித்துள்ளார். சட்டப்பேரவை மானிய கூட்டத்தில் பேச வாய்ப்பு அளித்தால் நிச்சயமாக இது குறித்து விளக்கம் அளிப்பேன்' என தங்கமணி கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுகவின் உள்கட்சித் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலாம்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திற்குள்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு தொண்டர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, "வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆய்வுமேற்கொண்டு நிலக்கரி கையிருப்பில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் இது குறித்து ஏற்கெனவே நான் ஆய்வு செய்ததில் தெரியவந்தது.

2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை - செந்தில் பாலாஜி புகார்

இதையடுத்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்து அறிக்கை தாக்கல்செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் தேர்தல் வந்துவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஏற்கெனவே நான் எடுத்த கணக்கைத்தான் தற்போது செந்தில்பாலாஜி தெரிவித்து முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க முயற்சித்துள்ளார்.

மின் துறை அமைச்சர் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நானும் வெளிப்படையாக வரவேற்கிறேன். ஆகையால் எனது மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயமில்லை. சட்டப்பேரவை மானிய கூட்டத்தில் பேச வாய்ப்பு அளித்தால் நிச்சயமாக இது குறித்து விளக்கம் அளிப்பேன். திமுக அமைச்சர்கள் வேண்டுமென்றே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றஞ்சாட்டிவருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: செந்தில்பாலாஜியின் ட்விட்டர் பதிவால் பரபரப்பு

Last Updated :Aug 21, 2021, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.