கத்தரி வெயிலிலும் நாமக்கல் மலைக்கோட்டையில் காதலர்கள் அட்டகாசம்!

author img

By

Published : Apr 9, 2022, 2:15 PM IST

நாமக்கல் மலைக்கோட்டையில் காதலர்கள் அட்டகாசம்

நாமக்கல்லில் புகழ்பெற்று விளங்கும் மலைக்கோட்டையின் மீதுள்ள சுவர்களிலும், அங்குள்ள பாறைகளிலும், மறைவிடங்களிலும் காதலர்கள் அமர்ந்திருக்கின்றனர். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜோடியாக வந்து முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

நாமக்கல்: சாளக்கிராமம் எனும் பத்து அடி கல், பல அடி உயர மலையாக உருவெடுத்த வரலாறு கொண்டது நாமக்கல். கோட்டை போல் காட்சியளிக்கும் இந்த மலைக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், மலைக்கோட்டையின் பாரம்பரியம் பாதுகாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில், சுமார் 250 அடி உயரம் கொண்ட மலைக்கோட்டை அமைந்துள்ளது. பெருமாளுக்கு உகந்த சாளக்கிராமக் கல்லை ஆஞ்சநேயர் எடுத்து வந்ததாகவும், இங்குள்ள கமலாலயக் குளக்கரையில் வைத்துவிட்டு புனித நீராடி காயத்ரி மந்திரம் ஜெபித்து விட்டு திரும்பியபோது, கல், மலையாக உருவெடுத்து நின்றதாகவும், அதில் நரசிம்மரும், நாமகிரி தாயாரும் காட்சியளித்ததாகவும், அவர்களை வணங்கியபடி ஆஞ்சநேயரும் அங்கேயே நின்று விட்டார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மலைக்கோட்டையில் காதலர்கள் அட்டகாசம்

நாமகிரி என்றழைக்கப்பட்ட இந்த மலையானது பின்னாளில் நாமக்கல் என பெயர் மாற்றமானது. மலையின் மீது வரதராஜ பெருமாள் சன்னிதியும், இஸ்லாமியர்களின் தர்கா ஒன்றும் உள்ளது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் இந்த மலைக் கோட்டையானது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டதாகவும், திப்புசுல்தான் வெள்ளையரை எதிர்ப்பதற்காக இந்தக் கோட்டையை பயன்படுத்தினார் எனவும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? இங்குள்ள ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதரைத் தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் நாமக்கல் வருகின்றனர். அவர்கள், நரசிம்மர் சன்னதி அமைந்துள்ள மலை மீது செல்வதற்கு அச்சப்படும் நிலை காணப்படுகிறது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்குச் செல்வதற்காக, 20 ஆண்டுகளுக்கு முன் சிறிய படிக்கட்டுகள் ஏற்படுத்தி கைப்பிடியும் அமைக்கப்பட்டது. தற்போதைய சூழலில் பகல், இரவு நேரங்களில் காதலர்களின் புகலிடமாகவே உள்ளது.

மலைக்கோட்டையின் மீதுள்ள சுவர்களிலும், அங்குள்ள பாறைகளிலும், மறைவிடங்களிலும் அவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அங்கு நடக்கும் சம்பவங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜோடியாக வந்து முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். வரலாற்றுச் சின்னமாக விளங்கும் நாமக்கல் மலைக்கோட்டையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தொல்லியல் துறையின் கடமையாகும்.

இந்த மலைக்கோட்டைக்கு எங்கிருந்து வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல் இருக்கிறது. இதை முறைப்படுத்த மலைக்கோட்டையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். மலைக்கு செல்வோருக்கு அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி என்றும், குழந்தைகளை தவிர்த்து மற்ற அனைவருக்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

மலையின் மீது தவறுகளும், குற்றங்களும் நடக்காதவாறு முன்னாள் ராணுவத்தினரை பணியில் அமர்த்த வேண்டும், அழிந்து வரும் மலைக்கோட்டையின் பாதுகாப்பை உறுதி செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. நாமக்கல்லின் அடையாளம் மலைக்கோட்டை தான். பகலில் வெளி மாவட்டத்தினரையும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் இந்த கோட்டையானது, இரவில் யாருடைய கண்களுக்கும் தெரிவதில்லை.

முக்கியமாக, மலைக்கு செல்வோரை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்கான பாதுகாப்பு, கட்டண வசூல், மேற்பார்வை உள்ளிட்டவற்றை தொல்லியல் துறையானது மேற்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோரும் நிமிர்ந்து பார்க்கும் வகையில், மலைக்கோட்டையைச் சுற்றிலும் ஒளிரும் மின்விளக்குகள், உயர் மின்கோபுர விளக்குகள் போன்றவற்றை பொருத்த வேண்டும். முக்கியமாக மலைக்கோட்டை வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் தகவல் பலகை பொருத்தப்பட வேண்டும். நாமக்கல் மலைக்கோட்டையின் பெருமையை உலகளவில் உயர்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாறுதல்கள் குறித்து ஆலோசனை வழங்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.