சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்: ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி கொண்டாட்டம்!

author img

By

Published : May 24, 2023, 2:56 PM IST

sirkazhi

சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்: ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி கொண்டாட்டம்!

மயிலாடுதுறை: சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலை மீது தோணியப்பர் உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் 3 நிலைகளில் காட்சி தருகின்றனர். மேலும் இது திருஞானசம்பந்தர் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய அற்புத ஸ்தலமாகும்.

காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் தெற்குகோபுரம் அருகே தனி சன்னதியில் காட்சி தருகின்றனர். இவ்வளவு பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தொடங்கினர். இதுவரை சுமார் ரூ.20 கோடி செலவில் விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வந்தது.

மேலும் முத்து சட்டைநாதர் சுவாமி, திருஞானசம்பந்தருக்கு கருங்கல் மண்டபம், கருங்கல் பிரகாரங்கள், மேள்தளம் புதுப்பித்தல், வர்ணபூச்சு என திருப்பணிகள் சிறப்பாக நடந்துமுடிந்து கடந்த 20 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலையில் 8 கால யாகசாலை பூஜைகள் 11 பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. தினமும் காலை ஒன்றும், மாலை ஒன்றும் என 2 யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. மேலும் நேற்று மாலை 7 ஆம் யாகசாலை பூஜை முடிந்து, இன்று காலை 8 ஆவது யாகசாலை பூஜை துவங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இன்று நான்கு கோபுரங்கள், சுவாமி, அம்மன் விமான கலசங்கள், மலைக்கோயில் விமானகலசம் உள்ளிட்டவைகளுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தற்போது சுமார் 32 வருடங்களுக்கு பிறகு இந்த கும்பாபிஷேகம், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை செளந்தர்ராஜன், பல்வேறு மடத்து ஆதீனங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, செளந்தர்ராஜன், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.

கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டு, புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். மேலும், இந்த கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாட்டில், மயிலாடுதுறை எஸ்.பி உஷா தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுப்பட்டனர்.

இதையும் படிங்க: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 7-ம் கால யாகசாலை பூஜை: ஜப்பான் நாட்டினர் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.