டாஸ்மாக் சுவருதான் வீக்கு... ஆனா லாக்கரு ஸ்ட்ராங்கு!

author img

By

Published : Sep 21, 2021, 9:56 AM IST

சுவரில் துளையிட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை

பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் டாஸ்மாக் கடையின் சிசிடிவியை உடைத்து, சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. லாக்கரை (பெட்டகம்) உடைக்க முடியாததால் மூன்றரை லட்சம் ரூபாய் பாதுகாப்பாக உள்ளது.

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா பெரம்பூரில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள இந்தக் கடையை மேற்பார்வையாளர் அசோக், விற்பனையாளர் ரகுராமன் ஆகியோர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 19) இரவு 7 மணிக்கு வழக்கம்போல் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

நேற்று (செப்டம்பர் 20) காலை கடையைத் திறக்க வந்துபார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு அறுக்கப்பட்டு கிடந்தது. மேலும், கடையின் பின்புறம் ஒரு ஆள் நுழையும் அளவுக்குச் சுவர் துளையிடப்பட்டிருந்ததும், சிசிடிவி உடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

லாக்கரால் தப்பிய மூன்றரை லட்சம் ரூபாய்

மேலும் கடையின் சில பூட்டுகளைத் திறக்க முடியாததால் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பெரம்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் சிவதாஸ் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜா சம்பவ இடத்துக்கு வந்து, கொள்ளை முயற்சி குறித்து, கைரேகை வல்லுநர்கள், மோப்ப நாயை வரவழைக்க உத்தரவிட்டார். இக்கடையில் ஏற்கனவே ஒருமுறை கொள்ளை நடந்துள்ளதால், கடையில் வசூலாகும் பணத்தைப் பத்திரப்படுத்த பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொள்ளை முயற்சியில் பெட்டகத்தை உடைக்க முயற்சித்தும் முடியாததால், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் வசூலான மூன்றரை லட்சம் ரூபாய் தப்பியது. மேலும் கடையில் வைத்திருந்த மதுபாட்டில்கள் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் சென்றுள்ளனர்.

டாஸ்மாக் சுவருதான் வீக்கு... ஆனா லாக்கரு ஸ்ட்ராங்கு!

இது குறித்து, கடையின் சிசிடிவியின் டிவிஆர் பதிவுகளின் அடிப்படையில் காவல் துறையினர் கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 'எழுவர் விடுதலையை திமுக நீர்த்துப் போகச் செய்துவிட்டதோ?'

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.