அரசுக்கு எதிரான போராட்டத்தில் ரேசன் கடை பணியாளர் சங்கம் பங்கேற்கும் - சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன்
Published: Mar 19, 2023, 7:44 PM


அரசுக்கு எதிரான போராட்டத்தில் ரேசன் கடை பணியாளர் சங்கம் பங்கேற்கும் - சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன்
Published: Mar 19, 2023, 7:44 PM
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மார்ச் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் பங்கேற்கும் என்றும் திமுக ஆட்சி மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர் என்றும் நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட அமைப்புக் கூட்டம் மாநில தலைவர் ஜெயசந்திராஜா தலைமையில் இன்று (மார்ச் 19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித அவர், “பிப்ரவரி 2 ஆம் தேதி கூட்டுறவு சங்க செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்ட இரட்டை பில் முறை தடுக்கப்பட வேண்டும், ஏற்கெனவே உள்ள ஊழியர்களுக்கு பணி உயர்வு அறிவித்துவிட்டு, அதன் பின்னர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
இதனை வலியுறுத்தியும், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தாய் கழகமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மார்ச் 28 ஆம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்தப்போராட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் பங்கேற்கும். ரேஷன் கடை பணியாளர்கள் மீது பல தவறுதலான குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைக்கு வந்து ஆய்வு செய்யாமலேயே மொபைல் மூலம் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜாதி ரீதியாக ரேஷன் கடை ஊழியர்களை நடத்தும் அவல நிலை நீடித்து வருகிறது. இதனை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு ரேஷன் கடை பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதைக்கண்டித்து ஏப்ரல் 7ஆம் தேதி நாகை மாவட்ட இணை பதிவாளர் அலுவலகம் முன்பு மாநில சங்க நிர்வாகிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏடிஎம் மூலம் சம்பளம் வழங்காமல் பழைய முறையிலேயே சம்பளம் வழங்கப்படுகிறது.
இதில் மாபெரும் முறைகேடு இருப்பதாக சந்தேகப்படுகிறோம். வெளிப்படையான தன்மையில் சம்பளம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் நிதி நிலையை காரணம் காட்டுவது தவறானது. மத்திய மாநில அரசுகள் கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக முதலாளிகளுக்கு குறைவான வரியை விதிக்கிறது, ஆனால் ஏழைகள் நடுத்தர மக்கள் பாதிக்கும் வகையில் நடந்து கொள்கிறது.
ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் என்று பார்த்தால் 30 விழுக்காடு மட்டுமே நிலையான சம்பளம் பெறுகின்றனர். மற்ற அனைவரும் சிறப்பு ஊதியம், தொகுப்பு ஊதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என குறைவான தொகையை சம்பளமாக பெறுகின்றனர். குறைந்த சம்பளத்தில் அதிக வேலை செய்யும் நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மூன்று லட்சம் காலி பணியிடங்கள் அரசு அலுவலகங்களில் உள்ளன.
அவற்றை நிரப்புவதற்கு உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகப்பெரும் அதிருப்தியில் உள்ளனர். தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற பாட்டிக்களும் தாத்தாக்களும்!
