வங்கிகளில் கடன் பெற்று தருவதாக மோசடி.. மூவேந்தர் முன்னேற்றக் கழக நிர்வாகி கைது

author img

By

Published : Aug 29, 2022, 10:17 PM IST

டிஎஸ்பி வசந்தராஜ்

வங்கிகளில் கடன் பெற்று தருவதாக மோசடி செய்த மூவேந்தர் முன்னேற்றக் கழக நிர்வாகி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம், சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் பைனான்ஸ் கம்பெனியில் (மகேந்திரா) இருந்து பேசுவதாகவும் உடனடியாக வங்கியில் தனிநபர் கடன் தருவதாக கூறி ஒரு கும்பல் பேசி உள்ளது. அவர்களை நம்பி கடன் பெறுவதற்கான செயலாக்கபணம் (prosessing fees) உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் என்று கூறியதன் பேரில் மணிகண்டன் அவர்கள் குறிப்பிட்ட வங்கியின் பெயரில் பணம் செலுத்தியுள்ளார்.

ஆனால் கடன் கிடைக்காத காரணத்தால் அவர் மோசடி செய்தவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் கடந்த 25ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய், சித்தார்த்தன், சையதுஅப்துல்லா ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சிம்கார்டு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

டிஎஸ்பி வசந்தராஜ்

தொடர்ச்சியாக செல்போன் உதவியுடன் ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் நபர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அமர்நாத் என்பவரை இன்று மணல்மேடு அருகே காவல்துறையினர் கைது செய்தனர். மோசடி கும்பலிடமிருந்து 15க்கும் மேற்பட்ட செல்போன்கள் ஒரு லேப்டாப், 25க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வங்கி கடன் கேட்கும் வாடிக்கையாளரிடமிருந்து ஆதார் அட்டை டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று அதன் மூலம் டெல்லியில் இந்த கும்பல் சிம் கார்டை பெற்று தொலைபேசியில் தொடர்ந்து பேசி வந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சென்னை, பெங்களூர், கல்கத்தா, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு வங்கி கிளைகளில் இவர்கள் பணம் செலுத்தி பரிவர்த்தனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி பொதுமக்களை ஏமாற்றி வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணம், 6 வங்கி காசோலைகள், பொதுமக்களின் செல்போன் எண்களை எழுதி வைத்த நோட்டுகள் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திட்டத்தின் மூளையாக செயல்பட்ட அமர்நாத், மூவேந்தர் முன்னேற்றக் கழக அரியலூர் மாவட்ட இளைஞரணி செயலாளராக பொறுப்பில் இருந்தவர் என்றும் அமர்நாத் மீது சென்னை பெருநகரில் தரமணி மற்றும் சேலையூர் காவல் நிலையங்களிலும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு காவல் நிலையத்திலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மோசடி செய்த வழக்கிற்காக அமர்நாத் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் மட்டுமே புகார் அளித்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர் மீது யாராவது பணம் செலுத்தி ஏமாந்திருந்தால் காவல் நிலையங்களில் புகார் அளித்து நீதிமன்றம் வாயிலாக ஏமாந்த தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என்று மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.