வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

author img

By

Published : Aug 5, 2022, 4:48 PM IST

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத்தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை: வைகை ஆற்றில் நீர் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக நீர்பிடிப்புப்பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி அவற்றிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் முழுக்கொள்ளளவான 71 அடியில், 70 அடியை நீர்மட்டம் எட்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தொடர் மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளதால், 7 பிரதான மதகுகளில் இருந்து 2,735 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றைக்கடக்கவோ வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளன.

அதேபோல் மதுரை மாவட்டத்தில் கோரிப்பாளையம் அருகே அமைந்துள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் தரைப்பாலத்தில் பொதுமக்கள் வாகனங்களில் பயணிக்கவோ, நடந்து செல்லவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள சாலை போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

இதையும் படிங்க:காருக்குள்ளே ரகசிய அறை; கடத்தி வந்த ஹவாலா பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.