கனிமவள இழப்பீடு தொடர்பாக கணக்கெடுக்க கோரிய வழக்கு: தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Sep 24, 2021, 7:45 AM IST

தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

2018ஆம் ஆண்டுமுதல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தி கனிமவள இழப்பீடு தொடர்பாக கணக்கெடுக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், கனிமவளத் துறை இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

அதில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், நெல்லை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இணைந்து 4830933 கியூபிக் மீட்டர் கிராவல் மண், செம்மண், செம்மணல் போன்றவற்றைச் சட்டவிரோதமாக எடுத்துள்ளனர்.

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் தாலுகாக்களிலிருந்து 2018ஆம் ஆண்டுமுதல் இதுபோன்று மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது. இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தி கனிமவள இழப்பீடு தொடர்பாக கணக்கெடுக்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட - உடந்தையாக இருந்த அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "அரசு அலுவலர்களின் உதவியுடன் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது. ஆகவே முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மனுதாரரின் புகார் தொடர்பாக ஆய்வுசெய்தார். மனுதாரர் கூறும் புகாருக்கான சாட்சியங்கள் ஏதுமில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

இவற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், கனிமவளத் துறை இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: போலீசாருக்கு வார விடுமுறை - அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.