மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட சவுக்கு சங்கர்

author img

By

Published : Nov 21, 2022, 4:15 PM IST

Etv Bharat

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட சவுக்கு சங்கர், நீதிமன்ற நிபந்தனை உள்ளதால் அதையெல்லாம் முடித்துவிட்டுப் பிறகு பேசுவதாக செய்தியாளரிடம் தெரிவித்துச் சென்றார்.

சென்னையைச் சேர்ந்த சவுக்கு சங்கர், ட்விட்டரில், ‘நீதித் துறை ஊழல் கறை படிந்திருக்கிறது’ என கருத்துப் பதிவு செய்ததற்காக அவர் மீது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நீதித்துறை பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில் சென்னையைச் சேர்ந்த இதழியலாளர் சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கியது.

இதையடுத்து சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சங்கருக்கு உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது உச்ச நீதிமன்றம், சங்கருக்கான ஜாமீன் நிபந்தனைகளை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் விதிக்க உத்தரவிட்டது.

அதன்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதித்துறை பதிவாளர் வெங்கடவரதன் ஜாமீன் நிபந்தனைகளை பிறப்பித்துள்ளார். அதில், ’சவுக்கு சங்கர் தினமும் காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்களில் எந்த கருத்துகளையும் பதிவிடக் கூடாது.

நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சங்கர் ஆஜராக வேண்டும். நீதித்துறை குறித்து எந்த கருத்துகளையும் சங்கர் தெரிவிக்கக் கூடாது. ரூ. 20,000 மதிப்புள்ள இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும்’ என்றார். இவ்வாறு பதிவாளர் உத்தரவில் கூறியுள்ள நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜராகி கையெழுத்திட்டார்.

செய்தியாளரிடம் பேசிய சவுக்கு சங்கர்

தொடர்ந்து கையெழுத்திட்டு வெளியே வந்த சவுக்கு சங்கரை அவருக்கு நெருக்கமானவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி கேட்ட போது, ’தற்போது நீதிமன்ற நிபந்தனை இருப்பதால் எதுவும் பேச முடியாது. பிறகு பேசுகிறேன்’ எனக் கூறிச்சென்றார்.

இதையும் படிங்க: கேரளா நரபலி விவகாரம்; பெண்ணின் உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.