திருவிழாக்களில் ஆபாச நடனம்; டிஜிபி விளக்கமளிக்க உத்தரவு

author img

By

Published : Nov 24, 2022, 7:01 AM IST

Updated : Nov 24, 2022, 8:45 AM IST

திருவிழாக்களில் ஆபாச நடனம்; டிஜிபி விளக்கமளிக்க உத்தரவு..

குறவன், குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு காவல் துறைத் தலைவர், பழங்குடியினர் நலத்துறை இயக்குநரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை: மதுரையைச் சேர்ந்த முத்துமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”திருவிழாக்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன்-குறத்தி ஆட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் முன்பு புராணக் கதைகள், நீதிக் கதைகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நடத்தப்பட்டன. சமீபகாலமாக ஆபாச நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் அதிகளவு இடம் பெறுகின்றன.

இது குறவர் சமூகத்தினரின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே, ஆபாசமான முறையில் குறவன்-குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும். சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆபாச குறவன்-குறத்தி ஆட்டங்களை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், "குலசை திருவிழாவில் குறவன், குறத்தி எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடப்பட்டது எனக்கூறி அதற்கான புகைப்படம் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், பல ஆடல், பாடல் குழுவினர் குறவன், குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கக்கூடாது. எந்த சமூகத்தினரும், யாராலும் அவமதிக்கப் படக்கூடாது.

குறவன், குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு காவல் துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்ப இயலுமா? என்பது குறித்து, தமிழ்நாடு காவல் துறைத் தலைவர், பழங்குடியினர் நலத்துறை இயக்குநரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு'', வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற அரசுக்கு ஆலோசனை

Last Updated :Nov 24, 2022, 8:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.