இந்திய மருத்துவக்கழக மதுரைக்கிளையின் தலைவர் பதவிக்கு புதிய தேர்தல் நடத்த இடைக்காலத்தடை!

இந்திய மருத்துவக்கழக மதுரைக்கிளையின் தலைவர் பதவிக்கு புதிய தேர்தல் நடத்த இடைக்காலத்தடை!
இந்திய மருத்துவக்கழக மதுரைக்கிளையின் தலைவர் பதவிக்கு புதிய தேர்தல் நடத்த இந்திய மருத்துவக்கழக தலைமையகம் பிறப்பித்த உத்தரவிற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை இந்திய மருத்துவக்கழக மதுரைக்கிளையின் தலைவர் மோகன் பிரசாத் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்திய மருத்துவக்கழக மதுரைக்கிளையின் தலைவர் பதவிக்கு முறையான தேர்தல் மூலம் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
ஆனால், தற்போது மதுரை கிளைத்தலைவர் பதவிக்கு ஒரு மாதத்தில் தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி இந்திய மருத்துவக்கழகத்தின் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இது சட்ட விரோதமாகும். எனவே, தலைமையகத்தில் இருந்து மதுரைக்கிளைக்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிப்பது மட்டுமல்லாமல், அதை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், “இந்திய மருத்துவக்கழகத்தின் மதுரைக்கிளைக்கு புதிதாக தேர்தல் நடத்தும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து இந்திய மருத்துவக்கழகம் பதிலளிக்க உத்தரவிடுவதுடன், இவ்வழக்கின் விசாரணை ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: இந்தி பேசுபவர்கள் பானிபூரி விற்கிறார்கள்- ஆளுநரை வைத்துக்கொண்டே பேசிய பொன்முடி
