கூலித் தொழிலாளியிடம் ரூ. 10லட்சம் பணம் பறித்த வழக்கு - காவல் ஆய்வாளர் பிணை கோரி மனு

author img

By

Published : Sep 25, 2021, 5:19 PM IST

கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கு

கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தியின் பிணை மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்துள்ளது.

மதுரை: கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் வசந்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தேன். ஜூலை மாதம் கூலித் தொழிலாளியிடம் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கில் பிணை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "காவல் ஆய்வாளர் வசந்தி காவல் துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார். இதுவரையும் அவரிடமிருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றது. எனவே, மனுதாரருக்கு பிணை வழங்கக்கூடாது" என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி, "இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் காவல்துறை ஆய்வாளராக உள்ளார். இது அவரை மட்டும் அல்லாமல் அவர் சார்ந்த துறையையும் களங்கப்படுத்தும் விதமாகவே உள்ளது. எனவே, இந்த வழக்கில் முறையான விசாரணை மேற்கொண்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படவேண்டும் என நீதிமன்றம் விரும்புகிறது.

மனுதாரர் நீதிமன்ற தலையீட்டிற்கு பின்பே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின்பு அவருக்கு சொந்தமான வீடுகளில் ஆய்வு நடத்தப்படவில்லை. அவரது உறவினர்களுக்கு சொத்துக்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

மனுதாரர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஆவணங்கள், காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.

தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: Operation Disarm: 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.