கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை...

author img

By

Published : Mar 5, 2022, 1:27 PM IST

Updated : Mar 5, 2022, 2:23 PM IST

கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மதுரை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 11 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று (மார்ச்.5) தீர்ப்பு வழங்கியுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்.

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் பட்டதாரியான இவர் தன்னுடன் பயின்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 23.06.2015 அன்று கோகுல்ராஜ் மற்றும் அவரது பெண் தோழி ஆகிய இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளனர். பட்டியலின சமூதாயத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தனது உறவுக்கார பெண்ணுடன் பழகுவதை விரும்பாத யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கோயிலுக்கு வந்த தன் உறவுக்கார பெண்ணை மட்டும் அழைத்து சந்திரசேகர் - ஜோதிமணி தம்பதியுடன் அனுப்பி வைத்தனர். இந்த காட்சிகள் கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதன்பின் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கோகுல்ராஜுன் கண்களை கட்டி, காரில் அழைத்து சென்று ஒரு இடத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

23.06.2015

கோகுல்ராஜ் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

24.06.2015

கோகுல்ராஜ் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

25.06.2015

கோகுல்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்காமல் முழு விசாரணை நடத்தக்கோரி போராட்டம் நடத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து, கோகுல்ராஜ் மரண வழக்கை திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

18.09.2015

கோகுல்ராஜ் மரண வழக்கை விசாரித்த வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தனது முகாம் அலுவலக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

19.09.2015

கோகுல்ராஜ் மற்றும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

பின்பு, கோகுல்ராஜ் மரண வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனத் தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், யுவராஜ் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

11.10.2015

நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜ் சரணடைந்தார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேரை நாமக்கல் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

07.01.2016

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 1,318 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், கோகுல்ராஜின் தாயார் சித்ரா நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், வழக்கை வேறு ஊருக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, இவ்வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

அதன் பின், வழக்கு விசாரணை மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் 106 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். யுவராஜ் உள்பட மற்றவர்கள் சிறையில் உள்ளனர்.

09.02.2022

வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்தது.

இன்று (03.05.2022) தீர்ப்பு

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அருள்செந்தில், சங்கர், செல்வக்குமார், சுரேஷ், தங்கதுரை ஆகியோர் வழக்கிலிருந்து விடுவித்தும் மற்றவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் வரும் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள்

1. யுவராஜ்

2. அருண் - யுவராஜின் கார் ஓட்டுநர்

3. ஸ்ரீதர்

4. ரஞ்சித்

5. செல்வராஜ்

6. சதீஷ்குமார்

7. அமுதரசன்

8. சந்திரசேகரன்

9. குமார் (எ) சிவக்குமார்

10. பிரபு

11. கிரி

வழக்கிலிருந்து விடுவிப்பு

  1. அருள்செந்தில்
  2. சங்கர்
  3. செல்வக்குமார்
  4. சுரேஷ்
  5. தங்கதுரை

உயிரிழப்பு

  1. ஜோதிமணி

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு முடித்து வைப்பு

Last Updated :Mar 5, 2022, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.