அதிமுக திட்டங்களை திமுக அமைச்சர் செயல்படுத்த மறுக்கிறார்கள் - செல்லூர் ராஜூ

author img

By

Published : May 12, 2022, 7:48 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு

அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட திட்டங்களை தற்போதுள்ள மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் செயல்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை: காளவாசல் அருகேவுள்ள தனது சட்டப்பேரவை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (மே12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று மதுரை மாநகராட்சி மாமன்ற அவையில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.

பத்திரிகையாளர்களை தாக்கும் அளவிற்கு தொண்டர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்றால் மிகுந்த வருத்தத்திற்குரியது. மதுரையில் உள்ள அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு மாமன்ற அவையில் முறையான இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை நான் புகார் அளித்துள்ளேன். மாநகராட்சி மேயர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்நிலையில் அது குறித்த செய்தியை சேகரிப்பது பத்திரிகையாளர்களின் பணி.

அதனைச் செய்ய விடாமல் தாக்குவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவம் நடந்தால் அதிமுக சார்பாக தலைமை கழக உத்தரவின்பேரில் மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் குடும்பத்தார் தலையிடுவது கண்டிக்கத்தக்கது.

இது போன்ற நிலை காரணமாகத்தான் தினகரன் பத்திரிக்கை அலுவலகம் எரிக்கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். திமுகவின் அடிப்படை குணம் மாறாது என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதி அமைச்சர் மக்களின் நிலையை அறியாதவராக இருக்கிறார்.

நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் தனது அப்பாவுக்கு தெரியும் என்று சொன்னார் உதயநிதி ஸ்டாலின். தற்போது என்ன நடந்துள்ளது? கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற தவறி நிற்கிறது. மக்களுக்கு தேவைப்படக்கூடிய அனைத்து விதமான கட்டடங்களையும் கொண்டுவந்தது அதிமுக தான்.

அதேபோன்று பனையூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் சேர்க்கும் நடவடிக்கையை அதிமுக தான் மேற்கொண்டது. அங்கு நவீன முறையில் லேசர் ஷோ அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசினேன்.

இதற்கு குறுக்கிட்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் அனைத்துமே குளறுபடியாக தான் உள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு

அதிமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை தற்போது மதுரையில் உள்ள அமைச்சர்கள் செயல்படுத்தவில்லை என்றால் தற்போது மதுரையில் உள்ள அதிமுகவின் ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் மாமன்ற உறுப்பினர்களும் இணைந்து அழுத்தம் கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிப்புக்கு முழுக்கு - அரசியலில் ஆழப்பதியவுள்ள உதயநிதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.