அடங்காத காளைகளின் அலங்காநல்லூர்... வாடிவாசல் மாற்றமா...?

author img

By

Published : May 4, 2022, 12:43 PM IST

'பாரம்பரிய வாடிவாசலே எங்களின் பெருமை' - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் என்ற அரசின் அறிவிப்புக்கு பொதுமக்கள் கருத்து
'பாரம்பரிய வாடிவாசலே எங்களின் பெருமை' - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் என்ற அரசின் அறிவிப்புக்கு பொதுமக்கள் கருத்து ()

அலங்காநல்லூரில் ஜல்லிகட்டுக்கான புது மைதானத்தை அமைக்கப்போவதாக தமிழக அரசு கூறியுள்ள நிலையில், மைதானத்தின் சிறப்புகளை தக்கவைக்க வேண்டும் என்பது மதுரை மாநகரவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள வாடிவாசலில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இது மதுரையின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்றாக உள்ளது. மதுரையிலேயே அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் குறிப்பிடத்தகுந்த பார்வையாளர்களைப் பெற்றிருந்தாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் வாய்ந்ததாகும். இன்றைக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 'உலகப்புகழ்' என்ற அடைமொழியுடன்தான் அழைக்கப்படுவது வழக்கம். அதுமட்டுமன்றி, தமிழகத்தில் அரசு விழாவாக ஜல்லிக்கட்டு ஒன்று நடைபெறுகின்றதெனில் அது அலங்காநல்லூரில் மட்டும்தான்.

வாடிவாசலின் சிறப்பு: எந்த வாடிவாசல்களுக்கும் இல்லாத வகையில் அலங்காநல்லூரின் ஊர் மந்தையில் காளியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில்களுக்கு இடையே அமைந்துள்ள வாடிவாசல் தனிச்சிறப்பு வாய்ந்தது. சற்றே குறுகலாக இருந்தாலும், 'ட' வடிவில் அமைந்த இந்த வாடிவாசல் முன்பு காளைகள் சற்றே நின்று விளையாடும். வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும் காளைகள் நேரே வெளியேறாமல் மூலை வரையிலும் சென்று நின்று விளையாடும். ஆகையால் வீரர்களும் துடிப்போடு களமிறங்கி காளைகளின் திமில்களைப் பிடித்து விளையாடுவதற்கு ஏதுவான வாடிவாசல் இதுவாகும். பல்லாண்டுகளாக இங்குதான் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் அறிவிப்பு: இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி சட்டசபையில் நடைபெற்ற விவாதங்களின்போது 110 விதியின் கீழ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கென்றே தனியாக பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என அறிவித்தார். இது பல்வேறு தரப்பிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Vaadivaasl image, Alanganallur jallikattu, வாடிவாசல் மைதானம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் வாடிவாசல்

புதிய மைதானம் தேவையில்லை: இதுகுறித்து அலங்காநல்லூர் பொதுமக்களிடமும், ஜல்லிக்கட்டு வீரர்களிடமும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக பேசியபோது, தமிழக அரசின் இந்த அறிவிப்பினை பெரிதும் வரவேற்றனர். ஆனாலும் அலங்காநல்லூரின் தனிச்சிறப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் குரல்களில் தொனித்தது.

தற்போது பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்று வரும் காளியம்மன் கோவில் மற்றும் முத்தாலம்மன் கோவில்கள் அமைந்துள்ள மந்தைப் பகுதி வாடிவாசலை மேம்படுத்தவே அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காளியம்மன் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ள திடலில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பிரம்மாண்ட அரங்கம் அமைவதற்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வாடிவாசலை மேம்படுத்த கோரிக்கை: இதற்கு அவர்கள் பின்வரும் காரணங்களை பட்டியலிடுகின்றனர். தற்போதுள்ள வாடிவாசலிலிருந்து வெளியே வரும் காளைகள் 100 அடி தூரத்தில் இடப்பக்கம் திரும்பிச் செல்லும் வகையில் அமைந்திருப்பதால், வீரர்களோடு நின்று விளையாடுவதற்கு ஏதுவாக உள்ளது. பிற வாடிவாசல் அனைத்தும் நேராக அமைந்திருக்கின்ற காரணத்தால், காளைகள் நின்று விளையாட முடியாது. காளைகளும், வீரர்களும் ஒருவரோடு ஒருவர் மல்லுக்கட்டும் விதத்தில், அமைந்துள்ள இயல்பான தற்போதுள்ள அலங்காநல்லூர் வாடிவாசலை மேம்படுத்தினால்தான் பாரம்பரியம் மாறாமல் இருக்கும் என்கின்றனர்.

இடையூறு - மகிழ்ச்சி : ஜல்லிக்கட்டு நடைபெறுகின்ற ஒரு சில நாட்கள் மட்டும் தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு இருந்தாலும், அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர். அலங்காநல்லூர் ஊருக்குள் ஜல்லிக்கட்டு விழாக்கள் நடைபெறுவதையே அவர்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதுகுறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதாகவே தெரிவித்தனர். ஆனாலும், வெளிப்படையாக கருத்து சொல்ல தயக்கம் காட்டுகின்றனர்.

அடங்காத காளைகளின் அலங்காநல்லூர்... வாடிவாசல் மாற்றமா...? மக்கள் கருத்து என்ன?

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தனி மைதானம், வீரர்கள் பயிற்சி எடுத்துக்கொள்வதற்கான மையமாக அமைந்தால் வரவேற்பதாf கூறும் அவர்கள், தற்போதுள்ள மந்தை திடலையே மக்கள் அனைவரும் கண்டுகளிப்பதற்கு ஏற்றவாறு மேம்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

திசை மாறும் இளைஞர்கள்: அலங்காநல்லூரை சேர்ந்த விவசாயி பார்த்திபன் கூறுகையில், 'ஜல்லிக்கட்டுக்கான தனி மைதான அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், இன்னொரு புறம் இந்த இளைஞர்களைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. காளை மாடுகளைப் பராமரிப்பதற்காகவே எந்த வேலைக்கும் செல்லாமல் வீணே திரிகிறார்கள். அந்த இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு மாற்று முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றபோது, அதற்கு ஆதரவாக நானும் களத்தில் போராடிய இளைஞர்களுக்கு தேவையான பால், பழங்கள் வழங்கி உதவி புரிந்தேன். ஆனால், மாடுபிடி வீரர்களான இளைஞர்கள் ஜல்லிக்கட்டைக் காரணமாக வைத்து சோம்பித் திரிவதை என்னால் ஏற்க முடியவில்லை' என்கிறார் வேறு ஒரு கோணத்துடன்.

'எந்த அரசும் வெளியிடாத அறிவிப்பு': அதலை அருகிலுள்ள முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்த மாடு பிடி பயிற்சியாளர் ரஞ்சித் கூறுகையில், 'வேறு எந்த அரசும் வெளியிடாத அறிவிப்பு இது. இதனை நாங்கள் முழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். பாரம்பரியத்தையும், வரலாற்றையும் பாதுகாக்கின்ற முயற்சியாகவே இதனை நான் பார்க்கிறேன். மாவட்டந்தோறும் இதுபோன்ற மைதானங்கள் அமைக்க வேண்டும் என்பதும் எங்களுடைய விருப்பம். கிரிக்கெட், கபடி உள்ளிட்ட அனைத்து விளையாட்டிற்கும் தனியாக மைதானங்கள் இருப்பதுபோல், ஜல்லிக்கட்டுக்கும் அமைவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இதற்கு தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் மாடுபிடி வீர்ர்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்கிறார்.

மக்களின் கோரிக்கை:மாடு பிடி வீரர்களும், காளைகளும் பயிற்சி எடுத்துக் கொள்ளும் விதத்தில் அமையக்கூடிய தமிழக அரசின் தனி மைதான அறிவிப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அலங்காநல்லூரின் அடையாளமாகத் திகழக்கூடிய பாரம்பரிய வாடிவாசலை மேம்படுத்தி, அந்த இடத்திலேயே தொடர்ந்து ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற வேண்டும் என்பதுதான் அலங்காநல்லூர் வாழ் பொதுமக்கள், மாடுபிடி வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:'உயிரைக்கொடுத்தாவது தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம்' - மதுரை ஆதீனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.