மதம் மாறியவரை BC முஸ்லிமாக கருத முடியாது - உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை
Published: Dec 3, 2022, 1:09 PM


மதம் மாறியவரை BC முஸ்லிமாக கருத முடியாது - உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை
Published: Dec 3, 2022, 1:09 PM

இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் அடைந்தவரை BC முஸ்லிமாக கருத முடியாது என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்,“கடந்த 2008ஆம் ஆண்டு, நானும் எனது குடும்பத்தினரும் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினோம்.
இதனால் 2015-ம் ஆண்டு நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் சான்றிதழ் வழங்கினார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு BC முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன். முதன்மை மற்றும் மெயின் தேர்வு எழுதிய எனது பெயர், இறுதி தேர்வு பட்டியலில் இடம் பெறவில்லை.
எனவே இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைக் கேட்டேன். இதற்கு கிடைத்த பதிலில், என்னை BC முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல் பொதுப் பிரிவில் பரிசீலித்தது தெரிய வந்தது. எனவே என்னை BC முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலைக்கான உத்தரவை வழங்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,“மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு ஹாஜியார் அளித்த சான்றிதழைச் சமர்ப்பித்துள்ளார். அந்த சான்றிதழில் சத்தியமூர்த்தி என்பவர் அவராகவே விருப்பப்பட்டு இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
மதம் மாற்றத்துக்கு உட்பட்டவர், லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் என அரசு ஹாஜியார் அறிவிக்க முடியாது. இவ்வாறு இருக்கையில், மதச்சார்பற்ற அரசு வருவாய் அலுவலர், மதம் மாறிய நபர் எப்படி குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எனச் சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை.
ஏற்கெனவே இடஒதுக்கீட்டு சலுகையை அனுபவித்து வந்த ஒருவருக்கு மதம் மாறிய பிறகும் இட ஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது இந்த நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது.
எனவே மதம் மாறிய தன்னை BC முஸ்லிமாக கருத வேண்டும் என மனுதாரரின் மனு நிராகரிக்கப்படுகிறது. அதேநேரம் டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்த உத்தரவு சரியானது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இறுதியாக இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.
