பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மின் கட்டண உயர்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Sep 11, 2022, 10:34 PM IST

பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளக்கூடிய மின் கட்டண உயர்வு

அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தான் மின் கட்டண உயர்வு உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கரூரில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்னர் கூறுகையில், “தமிழ்நாட்டில் நேற்று (செப்.10) முதல் அமல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு குறித்து அனைத்து ஊடகங்களிலும் மிகப் பெரிதாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அதன் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசும், ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை மின்சார கட்டுப்பாட்டு ஆணையமும் பலமுறை கடிதம் அனுப்பி தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்த, மின் கட்டண உயர்வை மேற்கொள்ள வலியுறுத்தினார்கள்.

தமிழ்நாடு நிதித்துறை அமைச்சரை நேரில் சந்தித்தபொழுதும் காணொலிக்கூட்டங்கள் மூலமும் மின்சார வாரியத்தை மேம்படுத்த கேட்டுக்கொண்டதற்கு இணங்க மின் கட்டண உயர்வு பொதுமக்கள், சிறு, குறு, வணிக நிறுவனங்கள் பாதிக்காத வண்ணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் மின்சார வாரியத்தின் நிலையை சீர் செய்வதற்கு முதலமைச்சர் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக வழங்கி நிதி மற்றும் கடன் சுமையிலிருந்து மீட்க நடவடிக்கை மேற்கொண்டார்கள். நடப்பு ஆண்டில் ரூ.3,500 கோடி தமிழ்நாடு அரசு மானியம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மின் பகுப்பிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய மின் தொகுப்பை வழங்காமல் 20 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை வழங்காததை காரணம் காட்டி நிறுத்தினார்கள். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலையினை கருத்தில் கொண்டு, மின் கட்டண உயர்வினை அமல்படுத்த 7,338 பேரிடம் நேரிலும் மின்னஞ்சல் மூலமாகவும் கருத்துகள் பெறப்பட்டன.

தமிழ்நாட்டில் மூன்றரை கோடி நுகர்வோர் இருக்கும் நிலையில் மின் கட்டணம் குறித்து 3,338 பேர் மட்டுமே கருத்துகளைத் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விலை உயர்வில் இரண்டு விதமான கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளதாக கோரிக்கை பெறப்பட்டது.

இதே போல வணிக நிறுவனங்களுக்கு உத்தேசிக்கப்பட்ட கட்டண உயர்வு கூடுதலாக உள்ளது என பெறப்பட்ட கோரிக்கை அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் 3,217 கோடி ரூபாய் கட்டண குறைப்பு மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களோடு மின் கட்டணம் தமிழ்நாட்டில் மட்டுமே மிகக் குறைவு.

பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மின் கட்டண உயர்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி
  • 100 யூனிட் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின் நுகர்வோர் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு எவ்வித கட்டண உயர்வும் இன்றி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  • 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு வெறும் ரூ.27.50 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
  • 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர் 37 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ரூ.72.50 பைசா மட்டுமே மின் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர் தமிழ்நாட்டில் 18 லட்சத்து 82 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ரூ.147.50 பைசா மின் கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்கோடு ஒப்பிடுகையில் கர்நாடக மாநிலத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு ரூ.4.30 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 5.25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு கோடி நுகர்வோருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் சாதாரண நடுத்தர மக்களுகளான 63 லட்சம் மின் நுகர்வோருக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூபாய் 4.50 கட்டணத்தை, தமிழ்நாடு அரசு குறைத்து ரூ. 2.25 பைசாவாக நிர்ணயித்து தமிழ்நாடு அரசு மானியம் மின்சார வாரியத்திற்கு வழங்கி மின் கட்டணத்தை குறைக்க ஒப்புதல் வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள குடிசை தொழில், விவசாயம், கைத்தறி, விசைத்தறி போன்றோருக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது இதற்கான மானிய தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்குகிறது. குறிப்பாக தாழ்வழுத்த மின் சேவை பெற்று வரும் தொழில் நிறுவனங்களுக்கு உத்தேசிக்கப்பட்ட கட்டணத்தில் 0- 50 கிலோ வாட் பயன்பாட்டுக்கு ரூபாய் நூறு என்பதை வெறும் 0.75 பைசா என குறைக்கப்பட்டுள்ளது.

இதே போல 50-100 கிலோ வாட் பயன்பாட்டுக்கு 325 ரூபாய் கட்டணத்தை ரூ.150 என குறைக்கப்பட்டுள்ளது. 101- 112 கிலோ வாட் மின்சார பயன்பாட்டுக்கு ரூபாய் 600 கட்டணத்தை ரூ.150 என குறைக்கப்பட்டுள்ளது. தொழில் சார்ந்த வளர்ச்சிக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டு, கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதி தமிழ்நாடு அரசே நேரடியாக கொள்முதல் செய்வதால் 143 டாலர் என்ற நிலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் ஒன்றிய அரசு 203 ரூபாய் நிர்ணயம் செய்து நிலக்கரி கொள்முதல் மேற்கொள்ள அனைத்து நிலையிலும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சிறப்பான நடவடிக்கைகளால் ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு மற்றும் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கடன்சுமை குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய தொழில்கள் தொடங்க உள்ள தொழில் நிறுவனங்களின் மின் தேவை 2000 மெகாவாட் அளவுக்கு தேவை உள்ளதைக்கருத்தில் கொண்டு புதிய மின் திட்டங்கள் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு, தங்கு தடை இன்றி தமிழ்நாட்டில் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் சேவை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. காரணம் தமிழ்நாட்டில் மிகக் குறைந்த மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது காரணம்.

எனவே, அடித்தட்டு மக்கள் ஏழை, எளிய மக்கள் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவன பயன்பாடு, பெரிய தொழிற்சாலைகள் ஆகியவை பாதிக்கப்படாத வண்ணம் பார்த்து பார்த்து மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது” எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: குறைந்த வயது, இளம் வயது நாய்களை பிடிக்கக்கூடாது - சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.