ஆண்கள் குடும்ப நல கருத்தடை திட்டம் தொடக்கம்

author img

By

Published : Nov 23, 2021, 4:01 PM IST

Family Welfare Contraception

தனது மனைவியின் உடல்நலனை கருதி கணவன் எடுக்கக்கூடிய முடிவுதான் பேராண்மையின் வெளிப்பாடு எனக் கூறியதுடன் தமிழ்நாட்டில் முதல்முறையாக தொடங்கப்பட்ட தங்கத் தந்தை திட்டத்தை குறித்து துவக்கிவைத்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இவ்வாறு உரையாற்றினர்

கரூர் : கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் கரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நவ 20ஆம் தேதி காலை கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் முத்துச்செல்வன், குடும்ப நலத்துறை இயக்குனர் மருத்துவர் ஸ்ரீபிரியா தேன்மொழி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் சந்தோஷ் குமார், அரசுத் துறை அதிகாரிகள், குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொண்ட பயனாளிகள் உள்ளிட்ட மருத்துவ கல்லூரி மாணவ- மாணவியர் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கருத்தடை சிகிச்சை
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அனைவருக்கும் உதாரணமாக தங்கத் தந்தை திட்டத்தின்கீழ் நவின கருத்தடை சிகிச்சை மேற்க்கொண்ட கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உள்பட்ட வளையல்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரை பாராட்டி தங்கதந்தை எனும் கேடயம்,பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் .

Men's Family Welfare Contraception Program
தங்கத் தந்தை விருது
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், தமிழ்நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெறுவதால் அதிகரித்துவரும் தாய்சேய் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் குறைக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் முதல்முறையாக நவீன ஆண்கள் குடும்பநல கருத்தடை சிகிச்சை கரூரில் தொடங்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின் சிறப்பு
கடந்த இரு நாள்களுக்கு முன்பு சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இன்றைய தினமும் அதன் தொடர்ச்சியாக இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மயக்க மருந்து இன்றி ஒரு சில நிமிடங்களில் மேற்கொள்ளப்படும் இந்த நவீன சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை அறுவை சிகிச்சை நடைபெற்ற சில நிமிடங்களில் சிறு ஒய்வுக்கு பின், சிகிச்சை முடிந்து வழக்கமான பணிகளை தொடரலாம்.

ஆண்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் இல்லறவாழ்க்கையில் எந்தத் தடையும் ஏற்படாது என்பது இந்த சிகிச்சை முறையின் சிறப்பம்சமாகும். கரு வளர்ச்சியை ஏற்படுத்தும் உயிர் அணுக்கள் மட்டுமே நவின சிகிச்சை முறையில் அகற்றப்படுகின்றன . ஆண்மை குறைவு ஏற்படாது.எனவே ஆண்கள் அச்சமின்றி நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

பாராட்டு
இன்று கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட அனைவருக்கும் எனது மனதார பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்கள் தனது குடும்ப நலன் கருதியும் தனது மனைவியின் உடல்நலம் கருதியும் கணவன் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள எடுக்கக்கூடிய முடிவுதான் பேராண்மையின் வெளிப்பாடு.

Men's Family Welfare Contraception Program
ஆண்கள் குடும்ப நல கருத்தடை திட்டம் தொடக்கம்

குறிப்பாக கருத்தடை என்றாலே பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒரு செயலாக சமூகத்தில் பார்க்கப்படும் சூழலில் கத்தி இன்றி, ரத்தம் இன்றி, அறுவை சிகிச்சை தழும்பு கூட இல்லாமல் நவீன முறையில் ஆண்களுக்கு எளிமையாக நவின குடும்பநல சிகிச்சை தமிழகத்தில் முதல்முறையாக முன்மாதிரி திட்டம் கரூரில் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

21 ஆண்கள் சிகிச்சை
இதனைத் தொடர்ந்து நாள் முழுவதும் நடைபெற்ற இம்முகாமில் கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 21 ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்துகொண்டனர். அவர்களுக்கும் முகாம் நிறைவு விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற விழாவில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தங்கத் தந்தை என்னும் விருதினை வழங்கி கௌரவித்து, அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான உத்தேச ஆணைகளையும் வழங்கினார்.
இதன் மூலம் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, வீட்டிலுள்ள முதியவருக்கு முதியோர் உதவித்தொகை, விலையில்லா கறவை மாடு, சிறு குறு தொழில் துவங்க தனிநபர் கடன் 10 லட்சம் வரை பிணை இல்லாமல் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம், விவசாய நிலங்களில் 100 சதவீத மானியத்துடன் நுண்ணீர் பாசனம் அமைத்துத் தருதல் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்ட உதவிகள் பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

கரூர்
தமிழ்நாடு அளவில் கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நவீன குடும்ப நல கருத்தடை: நடமாடும் பரப்புரை வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.