விண்ணை முட்டிய காவிரி நீர்... ராட்சத குழாய் உடைப்பால் கரூரில் வெள்ளப்பெருக்கு - பயங்கர வீடியோ...

author img

By

Published : Aug 30, 2022, 6:05 PM IST

விண்ணை முட்டிய காவிரி நீர்

கரூர் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஓடும் காவிரி ஆற்றில் இருந்து, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கரூர் மாவட்டத்தைத் தவிர, அருகில் உள்ள திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்டப்பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.

கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் திருமாநிலையூர் என்ற இடத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிக்கு ராட்சத குழாய்கள் மூலம் மின்மோட்டார்கள் கொண்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கரூர் மாவட்டத்தின் கடவூர் அருகே உள்ள தரகம்பட்டி - மணப்பாறை சாலை விரிவாக்கப்பணிகள், தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரவு பகலாக நடைபெற்று வரும் பணியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, தரகம்பட்டி கடைவீதி அருகே உள்ள மணப்பாறை சாலையில் குடிநீர் குழாயில் இன்று (ஆக. 30) திடீர் உடைப்பு ஏற்பட்டு, சுமார் 30 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் வெளியேறியது. இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் அளவிலான தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனைக்காண அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கடவூர் வட்டாட்சியர் மூலம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவிரி ஆற்றில் இயக்கப்படும் மின்மோட்டார்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இருப்பினும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வெளியேறியது.

விண்ணை முட்டிய காவிரி நீர்... ராட்சத குழாய் உடைப்பால் கரூரில் வெள்ளப்பெருக்கு - பயங்கர வீடியோ...

இதனால் குடிநீர் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே இருந்த அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் குடிநீர் புகுந்தது. தொடர்ந்து, மாணவர்கள் பள்ளியை விட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இது தவிர கரூர் தரகம்பட்டி - மணப்பாறை நெடுஞ்சாலையில் செல்லும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், குடிநீர் குழாய் உடைப்பினை சரி செய்வதற்கு இரண்டு நாள்கள் மேல் ஆகும் என்பதால், திண்டுக்கல் நத்தம் பகுதிக்குச்செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. தரகம்பட்டி மணப்பாறை சாலை விரிவாக்கப்பணிகளின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்புக்கு அப்பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரே காரணம் எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நவீன இயந்திரங்களைக்கொண்டு சாலை பராமரிப்புப்பணி மேற்கொள்ளும்போது, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பகுதிகள், தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ள இடங்களில் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.