மாற்றுத்திறனாளிகளைப் புறக்கணிக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

author img

By

Published : Sep 1, 2021, 8:30 AM IST

மாற்றுத் திறனாளி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

கரூர்: திருச்சி மாவட்டத்திலிருந்து 1995ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு புதிய கட்டடம் திறக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படத் தொடங்கியது. கடந்த 20 ஆண்டுகளாக இங்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலும் எவ்வித தனிக் கவனமும் செலுத்தப்படுவதில்லை.

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவுக்குள்பட்ட மணதட்டை கிராமம் ஏழுநூற்றிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி (45). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த இரண்டு மாத காலமாக பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்கப் பெறாததால், இது சம்பந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுக 45 கிலோ மீட்டர் பயணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தன் தங்கையுடன் வருகைபுரிந்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வரை சுமார் 200 மீட்டர் தூரம் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் தரையில் தவழ்ந்தபடி வந்ததைப் பார்த்த அனைவருக்கும் மன நெருடலை ஏற்படுத்தியது.

இது குறித்து தாமரைச்செல்வியிடம் கேட்டபோது, மாதாந்திர உதவித்தொகை வங்கிக் கணக்கு வராததால் வறுமையில் வாடிவருவதாகவும், அதற்கான காரணம் குறித்துக் கேட்டறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததாகவும் கூறினார்.

நகரும் நாற்காலி அரசு சார்பில் இலவசமாகத் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட அனைத்து ஆவணங்களும் இருந்தபொழுதும் இதுவரை இலவச நகரும் நாற்காலி வழங்கப்படவில்லை எனவும் கூறினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைதரும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகரும் நாற்காலி, சிறப்பு கவனம் கொண்டு இது போன்ற அவலநிலையைப் போக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.