அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு.. முதல் நாளின் முழு விவரம்!

author img

By

Published : May 27, 2023, 11:08 AM IST

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு.. முதல் நாளின் முழு விவரம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டதன் முழு விவரத்தையும் காணலாம்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ஐடி சோதனையின்போது திமுகவினர் வாக்குவாதம்

கரூர்: தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் திமுக, அதிமுகவில் அதிகம் பேசப்பட்ட அமைச்சர்களில் முக்கியமானவர், செந்தில் பாலாஜி. அவர் அதிமுகவில் இருந்த போதும், திமுகவில் இணைந்த பின்பும், பரபரப்பாக பேசப்படும் அமைச்சராகவே வலம் வருகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக எழுந்த மோசடி புகார், நீதிமன்றம் வரை சென்று முடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமலாக்கத்துறை விசாரணை, கள்ளச்சாராய விற்பனையால் தமிழ்நாட்டில் நடக்கும் மரணங்கள் என கடந்த மாதம் முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார், அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், செந்தில் பாலாஜி பதவி வகித்து வரும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில், அரசு மதுபான பார் நடத்த விடப்பட்ட டெண்டர் முறைகேடுகள் குறித்து பார் நடத்தும் உரிமையாளர்கள் வழங்கிய புகார்களால் வருமான வரித் துறை சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இதில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் என பலரும் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர். இதற்காக நேற்று (மே 26) காலை 6 மணியளவில் கரூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட கார்களில் வந்த 75க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், ஒரே நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் மற்றும் கடை ஆகியவற்றில் சோதனையிட முயன்றனர்.

இந்த தகவல் அறிந்து காலை 8 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரத்தில் குவிந்த திமுகவினர், மோடி அரசின் கைக்கூலிகளாக வருமான வரித்துறை செயல்படுவதாகக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தக் கூட்டத்தில் கரூர் மாநகராட்சி கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, திமுக மேயர் கவிதா உள்ளிட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் 30க்கும் மேற்பட்டோர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரின் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு 200க்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டனர்.

அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், ‘வீட்டை விட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் உடனடியாக வெளியே வர வேண்டும், இல்லாவிட்டால் அனைவரும் உள்ளே வருவோம்’ எனக் கூறி கோஷமிட்டனர். அப்போது தனது காரில் இருந்த கைப்பை ஆவணக் கோப்புகளை எடுப்பதற்காக வெளியே வந்த வருமான வரித்துறை அதிகாரிகளில் ஒருவரான காயத்ரி, காரில் இருந்த ஏதோ ஒரு ஆவணத்தை வீட்டுக்குள் வைப்பதற்காக எடுத்துச் செல்வதாகக் கூறி திமுகவினர் சத்தமிட்டனர்.

ஒரு கட்டத்தில் ஐடி அதிகாரி காயத்ரியின் கைப்பை, செல்போன் மற்றும் ஆவணக் கோப்புகள் அனைத்தும் பறிக்கப்பட்டதால் அங்கு உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த அப்பெண் அதிகாரி, திமுக தொண்டர் குமார் என்பவரை தாக்கியதாகக் கூறி அவசரம் அவசரமாக திமுக தொண்டர், ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதன் பின்னர் பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுக பெண் கவுன்சிலர்கள் ஒருபுறம், மற்றொரு புறம் திமுக தொண்டர்கள் என நடுவில் சிக்கிக் கொண்ட வருமான வரித்துறை அதிகாரி காயத்ரியிடம், ‘ஐடி கார்டு எடு. எல்லாத்தையும் வெளிய வரச் சொல்லு. கேட்ட லாக் பண்ணு’ என்று ஒருமையில் பேசத் தொடங்கினர். இதனையடுத்து அங்கிருந்த மற்ற வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரியை மீட்க முயற்சி செய்தனர்.

இதனிடையே, இவை அனைத்தையும் கரூர் நகர காவல் ஆய்வாளர் மிதின் குமார் உள்ளிட்ட காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததால் கடுப்பான வருமான வரித்துறை அதிகாரிகள், கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால், அங்கு விசாரணை அதிகாரியாக அதே காவல் ஆய்வாளர் மிதுன் குமார் இருந்ததால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளும் சுமார் 11 மணியளவில் குவிந்தனர். மேலும், மாலை 4 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அனைவரும் கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லவில்லை. இதனிடையே திருச்சி மாவட்டத்திலிருந்து திருச்சி சரக டிஐஜி உத்தரவின் பேரில், அதிவிரைவுப் படை மற்றும் கமாண்டோ படை காவல் துறையினர் என 50க்கும் மேற்பட்டோர் கரூர் விரைந்தனர்.

இந்த நிலையில், திமுகவினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் எஸ்பியிடம் வலியுறுத்தினர். சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்வதற்காக கரூர் எஸ்பி சுந்தரவதனம் அவசரம் அவசரமாக புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுசில் குமார், கல்லா சீனிவாஸ், பங்கஜ் குமார் மற்றும் காயத்ரி உள்ளிட்டோர் அவசரப் பிரிவில் திமுகவினர் தாக்கியதாக அனுமதிக்கப்பட்டனர்.

மற்றொரு புறம் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட திமுகவினர், வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களை தாக்கியதாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பரபரப்புக்கு இடையே கரூர் மாவட்டத்தில் தொடங்கிய வருமான வரித்துறை சோதனை திடீரென நிறுத்தப்பட்டு, மாலை 5 மணியளவில் மீண்டும் தொடங்கப்பட்டது.

பின்னர், இரவு 8 மணி நிலவரப்படி, க.பரமத்தி பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு கல் குவாரிகள், சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் உள்ள இரண்டு தொழில் நிறுவனங்கள், கரூர் கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ், காந்திகிராமம் பிரேம் குமார் என்பவரது வீடு ஆகிய ஆறு இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இரவு 9 மணியளவில் கரூர் வந்தடைந்தனர்.

இதனையடுத்து, கரூர் ராயனூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கினர்.

நேற்று முழுவதும் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் இதுவரை எந்த வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதில் காயத்ரி என்பவர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், பிரபல தடகள வீராங்கனை என்பதும், இவர் சமீபத்தில்தான் வருமான வரித்துறை அதிகாரி பணியில் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 5 ஆயிரம் கோடியே இடியுது.. 14 கோடி இடியாதா? .. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.