ஊராட்சி மன்ற தலைவருக்கு சாதிய பாகுபாடு - செயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

author img

By

Published : Sep 25, 2022, 10:42 PM IST

Etv Bharat

கரூரில் ஊராட்சி மன்ற தலைவருக்கு சாதிய பாகுபாடு காட்டிய விவகாரத்தில் ஊராட்சி செயலாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர்: கரூரில் ஊராட்சி மன்ற தலைவருக்கு சாதிய பாகுபாடு அளித்ததாக ஊராட்சி மன்ற தலைவர் சுதா அளித்த புகாரில், காவல்துறை சம்பந்தப்பட்ட நான்கு பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் துவரபாளையம் காலனியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுதா முருகேசன் என்பவர் நன்னியூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த உடன் அதிமுகவில் இருந்து விலகி சுதா முருகேசன் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சுதந்திர தினத்தன்று தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடி கொடியேற்றுவதற்கு காவல்துறை போதுமான பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடு செய்தது. இது தவிர மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய தனியார் தொண்டு நிறுவன அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள சாதிய வன்கொடுமைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 15 தேதி 75 ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி கரூர் மாவட்டம் நன்னியூர் ஊராட்சியில் நடைபெற்ற கொடியேற்று விழா மற்றும் கிராம கூட்டத்தில் மனித உரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த மதுராவல்லி தலைமையில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாகலட்சுமி, தினேஷ் பாபு , நாராயணசாமி, சித்ரா உள்ளிட்ட 5 பேர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் செயல்பாடும் ஊராட்சி நிர்வாகத்தில் ஆதிக்க சமூகத்தின் தலையிடு எவ்வாறு உள்ளது என்பது குறித்து உண்மை கண்டறியும் ஆய்வினை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில் தமிழ்நாடு அரசிற்கு உண்மை கண்டறியும் குழு, தனது அறிக்கையை அனுப்பி வைத்திருந்தது . அதன் அடிப்படையில் கடந்த செப்.22ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் நன்னியூர் ஊராட்சியில் திடீர் விசாரணை மேற்கொண்டார் . அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் சுதா மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் போது கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை தணிக்கை பிரிவு அலுவலர் லீலாகுமார், கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை பேரில் நன்னியூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா வாங்கல் காவல் நிலையத்தில் செப்.22ஆம் தேதி மாலை சாதிய பாகுபாடு காரணமாக ஊராட்சி மன்ற தலைவராக பணி செய்ய விடாமல் தடுக்கும் 9வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி, முன்னாள் நன்னியூர் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி ஆகியோர் தூண்தலின் நன்னியூர் ஊராட்சி செயலாளர் நளினி மற்றும் நளினியின் கணவரான மக்கள் நல பணியாளர் மூர்த்தி ஆகியோர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு செப்.24ஆம் தேதி வாங்கல் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு அதிமுகவை சேர்ந்த 9வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி ,நன்னியூர் ஊராட்சி செயலாளர் நளினி மற்றும் அவரது கணவரான மக்கள் நல பணியாளர் மூர்த்தி நான்கு பேரை, வாங்கல் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவருக்கு சாதிய பாகுபாடு - செயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
ஊராட்சி மன்ற தலைவருக்கு சாதிய பாகுபாடு - செயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

மேலும் வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள ஊராட்சி செயலாளர் நளினியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி செயலாளரின் கணவர் மூர்த்தி மக்கள் நல பணியாளராக பணியாற்றி வருவதால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். 21ஆம் நூற்றாண்டில் சாதியை குறிப்பிட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைத்து உரிய ஆதாரங்கள் சாட்சியங்களை திரட்டி, காவல் துறை தண்டனை பெற்றுத் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கரூரில் பட்டியலின ஊராட்சி மன்றத்தலைவருக்கு பாதுகாப்பு வழங்க தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.