பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் கொலை வழக்கு: இதுவரை 7 பேர் கைது

author img

By

Published : Oct 8, 2021, 4:21 PM IST

பசுபதி பாண்டியனின் முக்கிய நிர்வாகி வெட்டி படுகொலை

பசுபதி பாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்துவந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர்: லாலாப்பேட்டை அருகே உள்ள கருப்பத்துரைச் சேர்ந்த கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (52), பசுபதிபாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்துள்ளார்.

இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காவல் துறையின் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பசுபதிபாண்டியன் படுகொலைக்குப் பிறகு, கடந்த சில ஆண்டுகளாக கரூர் லாலாப்பேட்டை அருகே உள்ள கருப்பத்தூர் என்னும் சொந்த கிராமத்தில் அவர் விவசாயம் செய்து வந்தார்.

இதனிடையே நேற்று முன்தினம், செப்.06 ஆம் தேதி அதிகாலை கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பு உள்ள விவசாயத்தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான 3 தனிப்படைகள், கடந்த இரண்டு நாட்களாகத் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதுவரை 7 பேர் கைது

இந்நிலையில் கொலை வழக்குத் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படைக்குத் தொடர்பு இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர், உறுதுணையாக இருந்த கரூர் லாலாப்பேட்டை கருப்பத்தூரைச் சேர்ந்த ராஜா என்கிற ராஜபாண்டியண் (33), வினோத்குமார் (36), குளித்தலை அருகே உள்ள வயலூர் சரவணக்குமார் (25), நாமக்கல் மாவட்டம் வரகூர் மனோஜ் (25), திருச்சி மாவட்டம் தொட்டியம் கார்த்தி(36), கரூர் திருக்காம்புலியூர் நந்தகுமார்(33) கம்மாநல்லூரைச் சேர்ந்த சுரேஷ்(36), உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

மேலும் இவ்வழக்குத் தொடர்பாக முக்கியக் குற்றவாளியும் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் நிர்வாகியுமான குமுளி ராஜ்குமார், இசக்கிகுமார் உள்ளிட்ட 4 பேரும் தலைமறைவாக உள்ளதால் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கோபாலகிருஷ்ணன் கொலை வழக்கில், பிரபல கூலிப்படை தலைவன் குமுளி ராஜ்குமாருக்கு உதவியதாக 7 பேரைக் கைது செய்துள்ள காவல் துறையினர், முக்கியக் குற்றவாளியாக உள்ள கூலிப்படை தலைவன் குமுளி ராஜ்குமாரை கைது செய்து, விசாரித்தால் மட்டுமே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மனைவி மீது திராவகம் வீசிய கணவர்: தேடுதல் வேட்டையில் காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.