ஓகி புயலில் ஒதுங்கிய கழுகு - அஸ்ஸாம் கொண்டு சென்று விடுவிக்க வனத்துறைத்திட்டம்!

author img

By

Published : Sep 23, 2022, 7:19 PM IST

4 ஆண்டுகளாக சிகிச்சையளிக்கப்பட்ட ’சினேரியஸ் கழுகு’ ; அசாம் கொண்டு செல்லத் திட்டம்

கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு வனத்துறையால் குமரி மாவட்டத்தில் பராமரித்து, சிகிச்சையளிக்கப்பட்ட 'சினேரியஸ் கழுகை' அஸ்ஸாம் மாநிலத்திற்குக் கொண்டு செல்ல வனத்துறையினர் தாயராகி வருகின்றனர்.

கன்னியாகுமரி: 2017ஆம் ஆண்டு ஓகி புயலின்போது வானில் திசை மாறி கன்னியாகுமரி பகுதியில் காயமடைந்து வந்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது ஓர் 'சினேரியஸ்' வகைக் கழுகு(Cinereous vulture). இந்தியாவில் அருகி வரும் இனமாகக் கருதப்படும், இந்தக் கழுகை குமரி மாவட்ட வனத்துறையினர் கடந்த 4 ஆண்டுகளாக உதயகிரி கோட்டை உயிரியல் பூங்காவில் கொண்டு சேர்த்து, சிகிச்சை அளித்து பாதுகாத்து வந்தனர்.

இதன் மீது ஜிபிஎஸ் கருவி பொருத்தி, அதனைக் கண்காணிக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நாளை(செப்.24) குமரி மாவட்டத்தில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்திற்குக்கொண்டு செல்ல வனத்துறையினர் தயாராகி வருகின்றனர். மீட்கப்பட்டபோது, எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் வந்த 'சினேரியஸ் கழுகு', தற்போது புது வேகத்துடன் உற்சாகமாக தெம்புடன் காணப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறை அலுவலர் இளையராஜா கூறுகையில், 'சுமார் மூன்றரை அடி உயரம், பெரிய கண்கள், கூரான நுனி உடைய வளைந்த அலகு, கால் விரல்களில் கூரான நகம், பறக்கும்போது சிறகுகளின் அகலம், 6 முதல் 14 கிலோகிராம் வரை எடை என மெகா சைஸில் காணப்படும் இந்த கழுகுகள் விண்ணுயர பறந்து, தனது அபாரமான பார்வைத்திறனால் விலங்குகள், மீன்களை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்தக் கழுகுகள் குஜராத்திலேயே அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, சுமார் ஒன்றரை கிலோ வரை மாமிசமும் கொடுத்து, இந்தக் கழுகை பராமரித்து வருகிறோம்' எனத் தெரிவித்தார்.

4 ஆண்டுகளாக சிகிச்சையளிக்கப்பட்ட ’சினேரியஸ் கழுகு’ ; அஸ்ஸாம் கொண்டு செல்லத் திட்டம்

மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு கழுகை வனப்பகுதியில் கொண்டு சென்று விட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், இது பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால், இதன் மீது ஜிபிஎஸ் கருவியினைப்பொருத்தி, அதனை கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

லிதுவேனியா நாட்டிலிருந்து இதற்காக பிரத்யேக ஜிபிஎஸ் கருவி வரவழைக்கப்பட்டுள்ளது. அதனைப் பொருத்தும் பணி முடிவடைந்ததைத்தொடர்ந்து நாளை உதயகிரி கோட்டை உயிரியல் பூங்காவில் இருந்து, இந்தக் கழுகை அஸ்ஸாம் மாநிலத்திற்குக் கொண்டு செல்ல குமரி மாவட்ட வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

இதில் பொருத்தப்பட்டு உள்ள ஜிபிஎஸ் கருவியை ஆராய்வதன் மூலம் இந்தக் கழுகின் இயற்கை வாழ்வியல் முறை, அதன் வாழ்விடம், அது பறந்து செல்லும் திசை உள்ளிட்டப் பல்வேறு புதுவிதமான தகவல்கள் கிடைக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரி அருகே தனியார் எஸ்டேட்டில் சுற்றித்திறியும் யானைக்கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.