‘திமுக டிராமா அரசியல் செய்து வருகிறது’ - அண்ணாமலை காட்டம்

author img

By

Published : Jul 30, 2021, 8:55 AM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை

தமிழ்நாட்டில் மாநில அரசுகளின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதாக திமுக 'டிராமா அரசியல்' செய்து வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலுக்கு வருகை தந்தார். தொடர்ந்து, நாகர்கோவில் நாகராஜா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

“அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை. அண்மையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்கள், தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளிட்டவை குறித்துப் பேசினர்.

அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு எப்படி தயாராகி வருகிறதோ அதைவிட பாஜக அதிகமாக தயாராகி வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம்.

அவர்கள் பொதுக்குழுவில் முறையாக தேர்வு செய்யப்பட்டவர்கள். அதிமுக, ஐந்தாண்டு காலமாக தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்தது. அதிமுகவிடம் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கேள்வி நீங்கள் கேட்பதற்கு யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.

மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் நடப்பதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக ஒரு டிராமா அரசியல் செய்து வருகிறார்கள். நாளை (ஜூலை.31) சென்னையில் மீனவர்கள் திமுகவைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பனவற்றையெல்லாம் மீனவர்களுக்கு திமுக அரசு செய்யவில்லை. அதைக் கண்டித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை பாஜக மீனவர் அணி சார்பில் நடத்துகிறார்கள். தேசிய மீன் வள மசோதா சம்பவத்தில் திமுக ஒரு டிராமா அரசியலை செய்கிறது. அவர்கள் கடந்த தேர்தல் அறிக்கையில் மீனவர்களுகாக அறிவித்த எதுவும் நிறைவேற்றப்படவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.

டிராமா ஆர்டிஸ்ட் மம்தா பேனர்ஜி

தொலைபேசி ஒட்டு கேட்கபட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்த கேள்விக்கு, “வேலையில்லாத கட்சி தான் காங்கிரஸ் கட்சி. கதை, திரைக்கதை, வசனம் என்பவற்றை எழுதி நாடாளுமன்றத்தில் ’பெகாசஸ்’ என்னும் படத்தை போட்டார்கள். அது அரைமணி நேரம் கூட அது ஓடவில்லை.

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை

இப்போது புதிதாக மம்தா பேனர்ஜி என்ற ’டிராமா ஆர்டிஸ்ட்’ அதில் சேர்ந்திருக்கிறார். பெகாசஸ் மூலம் எந்த ஒரு விஷயமும் நடைபெறவில்லை. ஆனால் அதைக் குற்றச்சாட்டாக வைத்துள்ளனர். ஒட்டு கேட்கிறார்கள் என்றால் ஒரு ஆடியோ கூட வெளியாகவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பாக ராகுல் காந்திக்கு எந்த வேலையும் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது” என்றார்.

இதையும் படிங்க: 'நடைமுறைக்கு வருகிறது ஓபிசி 27% இட ஒதுக்கீடு; பாஜக ஆட்சியில் உண்மையான சமூகநீதி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.