காஞ்சிபுரம்: மேல்கதிர்பூரில் அமைந்துள்ள செங்கொடியூர் மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவிடத்தில் இன்று(நவ.11) ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் செங்கொடியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளன் கூறுகையில், “இந்த தீர்ப்பு உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியையும்,மன நிறைவையும் கொடுக்கின்றது. இந்த ஒரு நாளுக்காக தான் நாங்கள் தவிப்போடு காத்துகிடந்தோம். கடந்த மே 18அன்று நான் மட்டும் விடுதலையாகி வந்தாலும் கூட, மே 18க்கான தீர்ப்பு இவர்களின் விடுதலைக்கான கதவைத் திறக்கும் என எனக்கு நன்கு தெரியும்.
இன்றைக்கு இந்த தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதற்காக பாடுபட்ட வழக்கறிஞர்கள், ஆதரவு கொடுத்தவர்கள் என அனைவருக்கும் மிக்க நன்றி. மேலும், தமிழகத்தில் ஆதரவு கொடுத்த எல்லா இயக்கங்களும், கட்சிப்பாகுபாடின்றி அனைத்து கட்சிகளுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
32ஆண்டுகள் கழித்து நீண்ட காலமாக இழந்த வாழ்க்கை கிடைக்கும் என எதிர்பார்ப்போடு ஏக்கத்தோடு இருந்த வாழ்க்கை கிடைக்கும்போது எல்லோரிடத்திலும் அது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகத்தோட ஓட்டத்திற்கு ஏற்றார்போல் என்னால் ஓட முடியுமா என்பது தெரியவில்லை.
ஆனால் நான் அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளேன். இன்றைய விஞ்ஞான உலகமும், வீதிகளும், கட்டடங்களும் வியப்பாக உள்ளது. பிரமிப்பை கொடுக்கின்றது. இதோடு பயணித்து என்னுடைய எஞ்சிய வாழ்க்கையை நான் நகர்த்த வேண்டும். எனது அப்பா, அம்மாவை நான் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Rajiv Gandhi case: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை.. அரசியல் தலைவர்கள் கருத்து!