ஸ்ரீபெரும்புதூரில் ரூ.30 கோடி நில மோசடி - டி.ஆர்.ஓ உள்ளிட்ட 5 அரசு அலுவலர்கள் கைது

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.30 கோடி நில மோசடி - டி.ஆர்.ஓ உள்ளிட்ட 5 அரசு அலுவலர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே 30 கோடி ரூபாய் நில மோசடி வழக்குத் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், இரு வட்டாட்சியர்கள், சார்பதிவாளர், நில அளவையர் உள்ளிட்ட ஐந்து பேரை காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வல்லம்-வடகால் மற்றும் பால் நல்லூர் கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவுகள் அமைக்கப்பட்டன. விஜிபி நிறுவனத்தின் சார்பாக அதன் பங்குதாரர் ராஜதாஸ் என்பவர் மேற்படி மனை பிரிவுகளுக்கு பொது உபயோகத்திற்காக சுமார் 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வழங்கினார்.
இந்நிலையில் அந்த நிலங்களை விஜிபி அமலதாஸ் ராஜேஷ் என்பவர் மோசடி செய்து விற்பனை செய்ததாக தெரியவந்தது. மோசடி செய்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூபாய் 30 கோடியாகும்.
பொது உபயோகத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தினை ரத்து செய்து அதற்கு உடனடியாக செயல்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் ( இந்து சமய அறநிலையத்துறை,சென்னை ) மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த சார் பதிவாளர் ராஜதுரை ( காஞ்சிபுரம் இணை பதிவாளர்), வட்டாட்சியர்கள் எழில் வளவன் ( நில எடுப்பு பிரிவு,காஞ்சிபுரம்), பார்த்தசாரதி ( ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் ) மற்றும் உதவியாளர் பெனடின் என ஐந்து பேரை காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினர் 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் பின்னர் அவர்கள் ஐந்து பேரையும் சிபிசிஐடி காவல் துறையினர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அரசுத்துறையில் டி.ஆர்.ஓ போன்ற உயர் பதவி வகிக்கும் அரசு அலுவலர்களே இதுபோல் அரசு நிலத்தை மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 30 கோடி ரூபாய் நில மோசடி வழக்குத்தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், இரு வட்டாட்சியர்கள், சார்பதிவாளர், நில அளவையர் உள்ளிட்ட ஐந்து பேரை காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘வரலாற்றில் இல்லாத வகையில் 1.17 லட்சம் மில்லியன் மின்சாரம் விநியோகம்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி
